Monday, June 3, 2013

ஒரு துளி நம்பிக்கை

தினமும் செய்திதாள்களில்  வரும் செய்திகளில் ஒன்றாக தான் ஆரம்பத்தில் டெல்லியில் நடந்த கொடூர சம்பவத்தை படித்தேன். இது மாதிரி  செய்திகளுக்கு இந்திய செய்தி தாள்களில் பஞ்சமா என்ன? உச்சு கொட்டிவிட்டு பிற வேலைகளில் மீண்டும் ஆழ்ந்து விட்டேன். ஆனால் தொலைக்காட்சி செய்திகளும், பிற ஊடகங்களும் டெல்லி மக்களின் கோபமும் அந்த சம்பவத்தை பரபரபாக்கி கொண்டிருந்தன.

இரண்டு  நாட்கள்  கழித்து மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது, தலையை  கவிழ்த்து கொண்டு உட்கார்ந்திருந்தான் என் மகன். மருத்துவ கல்லூரியில் படிக்கிறான், குளிர் கால விடுமுறையை என்னோடு கழிக்க வந்திருந்தான்.

 "உடம்பு ஏதும் சரியிலையா? தலை வலிக்கிறதா ?" என்று கவலையுடன் கேட்டேன்.

"தாங்க முடியவில்லை அம்மா...." என்றான் அவன். அவன் குரல் மிகவும் சோர்வாக இருந்தது.

பதறி போய், "என்னடா கண்ணா ஆயிற்று?" என்று கேட்டேன். 

அமைதியாக மடி கணினியை திறந்து ஏதோ ஒரு வலைத்தளத்தில் டெல்லி  மாணவிக்கு ஏற்பட்ட கொடூரத்தை விரிவாக விளக்கி இருந்த பக்கத்தை காட்டினான். படித்தவுடன் எனக்குமே தாங்கவில்லை. அதிர்ந்து போனேன். தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போன்று இருந்தது அதன் வீரியம்.

"இப்படி கூட மனிதர்களில் மிருகத்தனம் இருக்குமா, அம்மா?", என்று கேட்டான்.

"இந்த பெண் கண்டிப்பாக பிழைக்க மாட்டாள் அம்மா.....எனக்கு தெரியும்".  என்றான்.  உடல் கூறுகளை பற்றி பயின்று இருந்ததாலோ என்னவோ உறுதியாக சொன்னான்.

அதன் பின் ஏதோ பத்தோடு பதினொன்று என்று நினைத்து அந்த செய்தியை  விட முடியவில்லை. தினமும் இருவரும் அந்த செய்தியின் தொடர்ச்சியை படிப்பதும், விவாதிப்பதும், கோப படுவதுமாக இருந்தோம்.

 மனதில் ஏதோ ஒரு விதமான அமைதி இன்மை. புத்தாண்டை கொண்டாடும் மனநிலை இல்லை. அந்த பெண் இறந்த செய்தி எங்கள் இருவரையும் துக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.

நான்  வேலை செய்வது ஐரோப்பியர் அதிகம் வேலை செய்யும் ஒரு உலகளாவிய எண்ணெய் நிறுவனம்.  தினமும் காலையில் வேலையை ஆரம்பிக்கும் முன்னர் எல்லோரும்  காபி குடிக்க ஒன்றாக கூடுவது வழக்கம். பரஸ்பரம் காலை வணக்கம் பரிமாறி கொள்வதும், சூடான செய்திகளை  விவாதிப்பதுமாக கலகலப்பாக தொடங்கும் எங்கள் காலை. கேலிக்கும் கிண்டலுக்கும் கூட குறைவு இருக்காது. அன்று வருட கடைசி என்பதால் நிறைய பேர் விடுப்பில் இருந்தனர், வழக்கமாக கூடுவதை விட குறைவான ஆட்களே கூடி இருந்தனர். 

டெல்லி சம்பவமும் அந்த பெண்ணின் மரணமும் தான் அன்றைய விவாதம் என்று எனக்கு புரிய வெகு நேரம் ஆகவில்லை. வெளிநாட்டு ஊடக வட்டாரத்திலும் இந்த சம்பவம் பரபரப்பு அடைந்து விட்டதால், அலுவலகத்தில் கூட வேலை செய்யும் வெளிநாட்டவர்க்கு எல்லா விவரங்களும் தெரிந்து இருந்தன. நான் வருவதற்கென்றே காத்து இருந்தார் போல் எல்லோரும் கேள்வி கணையால் என்னை துளைக்க ஆரம்பித்தனர்.  

"இரவு ஒன்பது மணிக்கு கூட பெண்களால் இந்தியாவில் வெளியே போக முடியாதா? அவ்வளவு  பாதுகாப்பின்மையா?"

 "அட.. கூட ஒரு ஆண் இருந்தும் கூட இந்த நிலமையா?"

"யார் வேண்டுமானாலும் குடி போதையில் வண்டி ஓட்டுவது இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடக்குமாமே?

"இந்தியாவில் பெண்ணை தெய்வம் என்பது எல்லாம் சும்மாவா?"

"நாட்டின் தலை நகரத்தில் இந்த கொடுமை என்றால், மற்ற சிற்றூர்களில் என்னவெல்லாம் நடக்குமோ .."

"டெல்லி  முதல் அமைச்சர் கூட பெண்ணாம்..அப்படி இருந்தும் ..இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்கிறதாமே...ஏன் இப்படி.?

"மேற்கத்திய கலாச்சாரத்தை குறை சொல்லுகிறார்கள்..ஆனால் எங்கள் நாடுகளில் இந்த மாதிரி நடப்பது கிடையாதே ...."

 "தங்கள் கலாசாரம் சிறந்தது என்று சொல்லுவார்கள் இந்தியர்கள்  ...ஆனால் உண்மை நிலை இப்படி  உள்ளது  ..?"

நான் என்னால் முடிந்தவரை பதில் சொன்னேன்.  இருந்தாலும் அவர்கள் கேட்கும் எல்லா கேள்விக்கும்  என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ரொம்பவே அவமானமாக இருந்தது. வேறு இந்தியர் யாரும் உதவிக்கும்  இல்லை. என் நிலைமையை பார்த்து  பரிதாப பட்ட ஒரு இங்கிலாந்து நாட்டு நண்பர் என் துணைக்கு வந்தார். 

"இந்தியா ஒரு மிக பெரிய நாடு. பெரும் மக்கள் தொகை கொண்டது. நம் நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டு பார்க்க முடியாது. பலவிதமான பிரச்சினைகளில் இருந்து அந்த மக்கள் மீண்டு வர முயற்சி செய்து கொண்டு முன்னேற துடிக்கிறார்கள் ...இந்திய அரசாங்கத்திற்கு அந்த பெரும் மக்கள் தொகையை சமாளிப்பதும், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதுமே பெரிய சவாலாக இருக்கிறது." என்று ஆரம்பித்தார்.  
 
தங்களுக்குள் ஒருவர் இந்தியாவின் சார்பாக பேச தொடங்கியதும்  எல்லாரும் அவரை கவனிக்க  ஆரம்பித்தார்கள். அவர் தொடந்தார்.

"இந்தியவின் பெரும் மக்கட் தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாதிரி சம்பவங்களின் விகிதம் மிக மிக குறைவு.  இந்திய நகரங்களில் ஒரு சாலை சந்திப்பில் கூடும் மக்கள் கூட்டம்  நம் நாடுகளில் ஒரு விழா காலத்தில் கூடுவது கூட அரிது. ஆகையால் நம் நாடு பாதுகாப்பு மாதிரி அங்கு எதிர் பார்க்க முடியாது."

"இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் சாதுவானவர்கள் தாம். கலாசாரத்தை பேணுபவர்கள் தான். பெண்களுக்கு தீங்கு விளைவிக்காதவர் தாம். "

"பல மதங்கள், பற் பல இனங்கள், வெவ்வேறு மொழிகள், மாறுபட்ட கலாச்சாரங்கள்,  எண்ணங்கள், நடை முறைகள் இவை எல்லாம் கடந்து ஒரு நாடாக அவர்கள் விளங்குவது பெரும் அதிசயம் .." என்றார்.

"மேலும் நான் பல முறை இந்தியா சென்று இருக்கிறேன்.  நானோ என் மனைவியோ ஒரு போதும் அங்கு பாதுகாப்பின்மையை உணர்ந்தது இல்லை. மாறாக திரும்பவும் போக வேண்டும் என்ற ஆசை தான் மேலோங்குகிறது. இந்தியாவின் ரயில் பயணங்களும், கடைகளும், உணவு வகைகளும், அந்த  மக்களின் அன்பும், இந்தியாவின் பண்டிகைகளும், வண்ணங்களும், மலர்களும் ..என்னால் மறக்க முடியாதவை ..நீங்கள் நேரில் போய் பார்த்தால் தான் உணர முடியும். அதனால் இந்த சம்பவத்தை கொண்டு ஒரு தப்பான முடிவுக்கு யாரும் வர வேண்டாம்". அப்பாடி தப்பித்தேன், என்று அவரை நன்றியுடன் பார்த்து விட்டு என் இருக்கைக்கு வந்து விட்டேன். 

அந்த பெண் இறந்த பின்னும் அந்த சம்பவத்தை பற்றியும், அவள் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன. அதில் ஒரு செய்தி என் மனதை வெகுவாக பாதித்தது. வீதியில், உறையும் பனியில், இரவில் அந்த பெண் உடுப்புகள் இன்றி உயிருக்கு போராடியபடி கிடந்த போது, சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில்  ஒருவரும் உதவ முன் வரவில்லை என்று அந்த பெண்ணின் தோழன் சொல்லி இருந்த செய்திதான் அது. ச்சே ...என்ன மக்கள் இவர்கள் என்று நொந்து போனேன். இப்படி வெட்கமின்றி வேடிக்கை பார்த்து விட்டு பின்னர் எதற்கு போராடுகிறார்கள் என்று தோன்றியது. திடீரென்று மனதில் ஒரு விதமான பீதி குடி கொண்டது. என்ன ஆயிற்று நம் நாட்டிற்கு? எதை நோக்கி போகிறது? மனிதாபிமானம் செத்து விட்டதா? வாழ்க்கை அவ்வளவு இயந்திர தனமாக ஆகி விட்டதா? ஒன்றும் புரியவில்லை. நாம் ஊரை விட்டு  வந்த இந்த நாலைந்து  வருடங்களில் இவ்வளவா மோசமாகி விட்டது? நம்ப முடியவில்லை. சட்டம் ஒழுங்கு எல்லாம் மொத்தமாக சீர் குலைந்து விட்டதா?

இதற்கிடையில் திடீரென்று என் கண்களில் இனம் புரியாத ஒரு பாதிப்பு ஏற்பட்டது. கண்களுக்குள் திரை விழுந்தாற்போல் பார்வை தடுமாறியது. தலைவலியும் நின்ற பாடில்லை. தோஹாவில் இருக்கும் கண் மருத்துவரிடம் சென்ற போது, சென்னைக்கு போய் மருத்துவத்தை தொடர்வது நல்லது என்று அறிவுரைத்ததால் நானும் என் மகனும் ஊருக்கு அவசரமாக திரும்பினோம்.

எங்கள் வீடு காஞ்சிபுரத்தில் இருந்தது. தினமும் எழும்பூரில் உள்ள சங்கர நேத்ராலயாவிற்கு கண் சிகிச்சைக்காக போக வேண்டும். சரியாக காலை ஏழேகாலுக்கு தென்னக ரயில்வேயின் திருமால்பூர் விரைவு ரயில் வண்டி  காஞ்சிபுரம் புது ரயில் நிறுத்தம் வரும். அதில் போனால் எழும்பூரில் ஒன்பதரை மணிக்கு இறங்கலாம். மாலை சரியாக ஆறேகால்  மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் திரும்பும். இரவு எட்டறை  மணிக்கு வீடு திரும்பலாம். தினமும் போக வேண்டி இருந்ததால் நானும் என் கணவரும் ஒரு மாதத்திற்கான முதல் வகுப்பு சீட்டு வாங்கி கொண்டோம்.

அந்த விரைவு ரயில், அரசு பணியாளர்கள் சென்னையில் உள்ள தம் அலுவலகங்களுக்கு செல்வதற்கென்றே இயக்க படுகின்றது. என் கணவர் சென்னை துறை முகத்தில்  பணியாற்றிய போதும் அதில் போவது வழக்கம். நீதியரசர், அரசு மருத்துவர், காவல் துறை  கண்காணிப்பில் பணியாற்றுபவர், மத்திய எண்ணை துறையில் பணியாற்றுபவர், முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் என்று அதில் வழக்கமாக போகும் பலர் என் கணவருக்கு பரிச்சியமானவர்கள். காலையில் அந்த முதல் வகுப்பு பெட்டி ஒரே குதூகலமாக இருக்கும். பரஸ்பரம் வணக்கம் சொல்வதும், நலம் விசாரித்து கொள்வதும், தினசரிகள் , புத்தகங்கள் பரிமாறி கொள்வதும், காலை உணவு பகிர்ந்து உண்பதும், அரசியல் நிகழ்வுகளை அலசுவதுமாக களை  கட்டும்.  எல்லாருமே என்னிடத்தில் அன்பாக இருப்பார்கள். ஆனால் எல்லாரும் மகிழ்ச்ச்சியாக இருக்கும் போது என் மனதில் மட்டும் எதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. மனச்சோர்வா அல்லது உடல் சோர்வா என்று புரியவில்லை.

இப்படியே பதினைந்து நாட்கள் கடந்தன. ஓரளவு கண் பார்வை சரியானாலும் மருத்துவமனைக்கு அடிக்கடி  போக வேண்டி இருந்தது. பொங்கல் கழிந்த பின் ஒரு நாள் காலை, வண்டி செங்கல்பட்டு சந்திப்பில் நின்று கொண்டு இருந்தது. பொதுவாக தினமும் அங்கே  பதினைந்து நிமிடங்கள் நிற்கும். மணியடித்து, ரயில் வண்டி நகர தொடங்கியது. அப்போது இரண்டு பெண்கள், ஒருவர் நடுத்தர வயது, மற்றொருவர்  நடுத்தர வயதை தாண்டியவர், ரயில் வண்டி கூடவே ஏற முயற்சி செய்தபடி ஓடி வந்தனர். இருவர் கையிலும்  கூடைகள் வேறு, ரொம்ப ஏழ்மையானவர்கள் என்று தோன்றியது. முதல் வகுப்பு பெட்டிக்கு அருகில் தான் பெண்களுக்கான சிறப்பு பெட்டி இருக்கும். அதில் ஏற தான் ஒடி வந்து கொண்டி இருந்தனர்.

வண்டி வேகம் எடுக்க தொடங்கி விட்டது. அவர்கள் ஏற முயற்சி செய்வதை விடவில்லை, பார்த்தால் விழுந்து இடையில் சிக்கி கொள்வார்கள் போல தெரிந்தது. ஜன்னலோரம்  இருந்த எனக்கு ரொம்பவே பதட்டம் ஆகி விட்டது. உடனே முதல் வகுப்பில் இருந்த ஆண்கள் பதறி போய் வாயில் பக்கம் ஓடினர். சட்டென்று அவர்கள் சுமைகளை வாங்கி கொண்டு, அவர்களை கரம் பற்றி இழுத்து எங்கள் பெட்டியில் ஏற்றி கொண்டனர். மரணத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய அதிர்ச்சியில் இரு பெண்மணிகளும் ரொம்ப படபடப்பில் இருந்தனர். பயத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மயங்கும் தருவாயில் இருந்தார்.

சரிதான், இந்த பெண்களுக்கு கண்டபடி திட்டு விழபோகிறது என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நடந்தது அதற்கு மாறானது. பட பட என்று எல்லாரும் ஆளாளுக்கு உதவி செய்தனர். இருவர் தம் இருக்கையை அவர்களுக்கு கொடுத்தனர். மற்றொருவர் குடிக்க தண்ணீர் கொடுத்தார். மூச்சு வாங்குவதை கவனித்த மருத்துவர் அவர்களை  விசாரித்தார்.   தன்  காலை உணவை எடுத்து இன்னொருவர் நீட்டினார். அந்த பெண்கள் இருவரும் இன்னும் பயத்தில் இருந்து மீளவில்லை போலும், சாப்பிட எதுவும் வேண்டாம் என்றனர்.

ஒருவாறு  அவர்கள் சுதாரித்து கொண்ட பின்னர்  நடந்தது தான் என்னை மிகவும் கவர்ந்தது. காவல் துறையில் பணி செய்பவரும், மருத்துவரும் சென்று அவர்கள் எதிர்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து அவர்களிடம் நிதானமாக பேச ஆரம்பித்தனர். அந்த பெண்மணிகள் செய்தது எவ்வளவு அபாயகரமான செயல் என்று எடுத்து உரைத்தனர். வண்டியை தவற விடும் பயத்தில் உயிரை தவற விடும் செயலில் அவர்கள் ஈடு பட்டதை சுட்டி காட்டினர். அவர் தம் குடும்பத்தை நினைவூட்டினர். இனிமேல் ஒருபோதும் அந்த தவறை செய்ய கூடாது என்று கண்டித்தனர். ஒரு வண்டியை தவறவிட்டால் பொறுத்து இருந்து அடுத்த வண்டியில் வரவேண்டும் என்று அறிவு கூறினார். அந்த பெண்களும் "சரிங்க ஐயா, சரிங்க ஐயா, இனிமே சாக்கிரதையாக இருப்போம் " என்று தலை ஆட்டி கேட்டு கொண்டதை பார்த்து ஒரு வகையான மன திருப்தியை கொடுத்தது.  பின் தாம்பரத்தில் வண்டி நின்ற பின் அவர்கள் இருவரும் அடுத்து இருந்த பெண்கள் பெட்டியில் ஏறி கொண்டனர்.

அன்று இரவு மருத்துவமனையில் மிகவும் தாமதம் ஆனதால் எங்களால் ஆறேகால் விரைவு வண்டியை பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் எட்டு மணிக்கு ஒரு சாதாரண வண்டி ஒன்று இருக்கும், அதையும் தவற விட்டு விட்டோம்.  அதன் பின் காஞ்சிபுரம்  செல்ல எங்களுக்கு நேரடியாக ரயில் வண்டி கிடையாது. பேருந்திலோ அல்லது காரிலோ சாலை வழியே போகலாம் என்றால் போரூர் அருகே வழக்கமாக இருக்கும் வாகன நெரிசலை நினைத்தாலே பயமாக  இருந்தது. அதற்கு பதில் செங்கல்பட்டு வரை ரயிலில் போய் அங்கிருந்து பேருந்தில் காஞ்சிபுரம் போகலாம் என்று முடிவு செய்தோம்.

அந்த ரயிலில் முதல் வகுப்பிற்கும் மகளிர் பெட்டிக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் கிடையாது. அருகருகே தான் இருக்கும், இடையில் ஒரு பாதி தடுப்பு மட்டும் தான் இருக்கும். ரயில் செங்கல்பட்டை நெருங்கும் போது முதல் வகுப்பில் இருந்த எல்லோரும் இறங்கி விட்டிருந்தனர். நாங்கள் இருவர் மட்டும் தான் இருந்தோம். மகளிர் பெட்டி பக்கம் எட்டி பார்த்தேன் , இரு பெண்கள் மட்டுமே இருந்தனர். செங்கல்பட்டு வரும் போது இரவு மணி பதினொன்றரை தாண்டி  விட்டது . எனக்கு அந்த பெண்களை நினைத்து ரொம்ப கவலையாகி விட்டது. இருவரும் தோழிகளும் அல்ல போலும். தனி தனியே அமர்ந்து இருந்தனர்.

அது தான் கடைசி ரயில், கிட்ட தட்ட நடு நிசியாகி விட்டது,  ரயில் நிலையம் ஆள் அரவமற்று இருந்தது. படிக்கட்டு வழி இறங்கி வெளியே வந்தால் பேருந்து நிலையம் . அதுவோ இருண்டு இருந்தது. ஒரு பேருந்தும் இல்லை. ஆனால்  அந்த நேரத்திலும் தமிழக அரசு காவல் துறை  வேன் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது.  அதில் அதிகாரி ஒருவரும்  காவலர்  ஒருவரும் இருந்தனர். அந்த பெண்கள் இருவரையும் அவர்கள் எங்கே போக வேண்டும் என்று விசாரித்தனர்.  அந்த பெண்கள் கவலை பட்ட மாதிரி தெரியவில்லை. தங்களுக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்று சொல்லிவிட்டு அலட்டி கொள்ளாமல் நடந்து சென்று விட்டனர். அவர்களிடம் எந்த பயமோ பதட்டமோ இல்லாதது கண்டு வியப்பாக அதே நேரம் பெருமையாகவும் இருந்தது.

பின்னர் அந்த காவல் அதிகாரி எங்களிடம் வந்து விசாரித்தார். என் கணவர் நடந்ததை சொல்லி நாங்கள்  காஞ்சிபுரம் போக வேண்டும் என்றார். மேலும் கீழும் பார்த்து விட்டு, "உடம்பு சரியில்லாமல் இப்படிதான் இரவில் பிரயாணம் செய்ய வேண்டுமா? சென்னையில் தங்கிவிட்டு வரலாமே ...கடைசி பேருந்து போய் விட்டது, எப்படி போவீர்கள்?" என்றார்.  எங்களுக்கு கவலையாகி விட்டது, என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதேனும் டாக்ஸி வருகிறதா பார்ப்போம் என்று அவரே சொன்னார்.

அந்த பக்கம் டாக்ஸி ஒன்றும் வருவதாக தெரிய வில்லை.  காத்து கொண்டிருக்கும் பொதுவாக பேசி கொண்டிருந்தோம். அப்போது, அந்த அதிகாரி கடைசி ரயில் வரும் நேரத்தில் ரோந்து வருவது வழக்கம் என்றும், ஏதேனும் சந்தேகப்படும்படி தோன்றினால் கண்காணிப்போம், தேவை பட்டால் பாதுகாப்பும்  அளிப்போம் என்று சொன்னார். 

"எங்களால் முடிந்தவரை அசம்பாவிதம் நடக்காமல் பார்த்து கொள்வோம். ஊரின் ஒவ்வொரு மூலை  முடுக்கிலும் போய்  நாங்கள் பார்ப்பது என்பது  நடைமுறையில் இயலாது  ...மேலும் ஒவ்வொரு தனி மனிதருக்கும்  பொறுப்பு வேண்டும் அல்லவா..தவறு நடக்க வாய்ப்பு இருக்கலாம் என்று  தெரிந்தும் அந்த மாதிரி சந்தர்பங்களை உருவாக்குவதும், எதிர்கொள்வதும் முட்டாள் தனம்.." என்றார்.  

 எங்களுக்கு டாக்ஸி கிடைத்து நாங்கள் அதில் போகும் வரை  அவர்களும் எங்களோடு காத்து இருந்தனர். பின்னர் எங்கள் டாக்ஸியுடன் சிறிது தூரம் வந்த பிறகு அந்த காவல் வண்டி பிரிந்து சென்றது.

அந்த இரவில் காஞ்சிபுரம் நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் போது காலையில் நடந்ததையும், இப்போது இரவில் கண்டதையும் என் மனது அசை போட்டு கொண்டு வந்தது. அந்த இங்கிலாந்து தோழர் சொன்னது நினைவு வந்தது. என் நாட்டை பற்றி பட்டுபோய் இருந்த நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டது.

Saturday, October 6, 2012

ஒரு தாயின் வாழ்த்து

"வீல்" என்று குழந்தையின் அழுகுரல். பிறந்து பதினைந்தே நாள் வயதான என் பிள்ளை அழும் குரல் தான் அது. ஓடோடி சென்று வாரி அணைத்து கொள்ள முடியாமல், தூரமாக கண்ணாடி கதவிற்கு அப்பால் நின்று துடித்தபடி நான். .

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் குழந்தை நல மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவின் வெளியே தான் நின்று கொண்டு இருந்தேன். உள்ளே ஒரு மேசையில் என் செல்வத்தை சுற்றிலும் ஐந்தாறு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்  நின்று கொண்டிருந்தார்கள். அந்த மேசை மேலே அறுவை சிகிச்சையின் போது  பயன் படுத்த படும் பெரிய மின்சார விளக்கு. விடாமல் அழுது கொண்டிருந்தான் என் செல்லம். 

 எல்லாமே நன்றாகத்தானே இருந்தது...இரண்டு நாள் முன்பு தான் விமரிசையாக பெயர் சூட்டும் விழா வீட்டில் நடந்தது.....இன்று அந்த குழந்தை உயிருக்கு போராடியபடி அவசர சிகிச்சை பிரிவில் ...ஒன்றுமே புரியவில்லை எனக்கு. ஏன் இப்படி ..என் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி மீண்டும் மீண்டும் ..மனம் பதை பதைக்கிறது ..என் பிஞ்சிற்கு மட்டும் ஏன் இந்த துன்பம்? வாய் விட்டு சொல்ல கூட தெரியாத பிறந்த குழந்தை ஆயிற்றே.. 

ஏதேதோ நினைத்து நினைத்து அழுதபடி நான் நின்று இருந்தேன், கண்களில் கண்ணீர் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. உள்ளே குழந்தையின் அழுகை ஒலி  சற்று குறைந்த மாதிரி இருந்தது. மருத்துவர்கள்  சற்று ஒதுங்கி நின்று பேசி கொண்டிருந்தனர். என் செல்வத்தின் கையிலும் மூக்கிலும் குழாய்கள் செருக பட்டு இருந்தது.  

சிறிது நேரம் கழித்து அவர்களில் இருந்து ஒரு மூத்த மருத்துவர் மட்டும் வெளியே வந்தார். என் கணவரிடம் ஏதொ கூறி, என்னையும் கூட  வர செய்து தம் அறைக்கு அழைத்து  சென்றார். என் கணவரை தன்னுடைய பெரிய இருக்கையில் உட்கார வைத்தார். அப்போதே எதோ விபரீதமாக சொல்ல போகிறார் என்று தோன்றியது. நான் நோயாளிகள் அமரும் சிறிய நாற்காலியில் அமர்ந்தேன். அவர் உட்காரவில்லை. அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்றபடியே ஏதேதோ சொல்லி கொண்டிருந்தார். என் மூளைக்கு எதுவும்  எட்டவில்லை. எனக்கு புரிந்ததெல்லாம் ஒன்று தான். உடனடியாக எங்கள்  செல்லத்திற்கு  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதுவும் ஐந்தாறு மணி நேரத்திற்குள்..என்னால் தாங்க முடியவில்லை. பூ போன்ற பிஞ்சு அது ..தாங்குமா? அய்யோ ..என்ன கொடுமை இது? 

"டாக்டர், அறுவை சிகிச்சை செய்தால் குழந்தைக்கு  சரியாகி விடுமா? " என்று கேட்டார் என் கணவர். என்ன சரியாகி விடும்... இப்போது  அவனுக்கு என்ன சரியாக இல்லை..எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

"இப்போது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். அதுவும் உடனடியாக செய்ய வேண்டும். இல்லை என்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து. அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை  உயிர் பிழைக்கலாம்...ஆனால் அறுவை சிகிச்சையும் நிரந்தர தீர்வு அல்ல. இப்போதைக்கு ஆபத்தான கட்டத்தை தாண்ட முடியும்..ஆனால் அதன் பின் மற்ற குழந்தைகள் மாதிரி  சாதாரணமாக இருப்பான் என்றும்   தீர்மானமாக சொல்ல முடியாது. இப்போதைக்கு என்னால் உத்திரவாதமாக எதுவும் கூற முடியாது. "  உணர்ச்சியற்ற குரலில் பதில் சொன்னார் மருத்துவர்.

எனக்குள் ஏதோ  ஒன்று சுக்கு நூறாக உடைந்து போனது. கண்ணீரை துடைத்து கொண்டு ஜடம் மாதிரி மருத்துவர் நீட்டிய படிவத்தில் கையொப்பம் இட்டுவிட்டு, கழுத்திலும் கைகளிலும் இருந்த சொற்ப தங்கத்தை கழட்டி கணவரிடம் கொடுத்துவிட்டு என் செல்லத்தின் அருகில் வந்தேன் . அழுது அழுது களைத்து போய் மயக்கத்தில் கண் மூடி படுத்து இருந்தான் என் செல்லம். எனக்கு அவனை தொட கூட தைரியம் இல்லை, தொட்டால் விழித்து கொண்டு அழுவானோ என்று தொடாமல் வெறுமே அந்த பால் போன்ற பட்டு முகத்தை பார்த்தபடி நின்றேன். 

சிறிது நேரம்  கழித்து சீருடை அணிந்த பணியாளர்கள் வந்து மேசையை  தள்ளி கொண்டு என் செல்லத்தை அறுவை சிகிச்சை அறைக்குள் கொண்டு சென்றனர். பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை அறுவை சிகிச்சைக்கு அனுப்பி விட்டு வெளியே காத்திருக்கும் கொடுமை ...அப்பப்பா ..யாருக்கும் இந்த நிலை வர கூடாது.
எத்தனை நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை ....என் செல்லத்தை மீண்டும் பார்த்தேன் ..... மூக்கில், வயிற்றில், கையில் குழாய்கள் செருக பட்டிருந்தது. நினைவு இருப்பதற்கு  அடையாளமாக  தலையை இப்படியும் அப்படியும் உருட்டி கொண்டிருந்தான் குழந்தை. கண்கள்  அரை குறையாக திறந்தபடி இருந்தது. அவன் கைகளையும், கால்களையும் அசைக்க முடியாத படி டேப்பை கொண்டு மேசையோடு ஒட்டி இருந்தனர். மயக்க மருந்து கொடுத்த பின்னும் ரொம்ப கையையும் காலையும் உதைத்து கொண்டானாம். சிறிய குழந்தை ஆனதால், மேலும் மேலும் மயக்க மருந்து கொடுத்தால் ஆபத்து ஆகலாம் என்று, அவனை மேசையோடு வைத்து கட்டிவிட்டு இருந்தனர். 

பாவம் போதிய மயக்க மருந்து கூட இல்லாமல் எவ்வளவு வலித்ததோ....எப்படி தாங்கினானோ .....என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை ......பெற்றோர் செய்த பாவம் பிள்ளைக்கு என்பார்களே ...நான் செய்த பாவம் தான் என் பிள்ளையை தாக்கி விட்டதா?  யாருக்கு என்ன கேடு விளைவித்தோம் ? என்ன பெரிய தவறு செய்து விட்டோம் ? அப்படி ஏதும் பெரிதாக பாவம் செய்து விட்டதாக நினைவில்லையே?   பின் ஏன் என் பிள்ளைக்கு இந்த நிலைமை ..இந்த வலி? என் பிள்ளையாய்  பிறந்ததே இவன் செய்த குற்றமா? என் ராஜகுமாரன் வேறு எங்காவது பிறந்து நல்ல படியாக வளர்ந்து இருக்க கூடாதா? 

  "குழந்தை பசியில் அழும்..ஆனால் இன்னும் பனிரெண்டு மணி நேரத்திற்கு பால் கொடுக்க கூடாது..." மருத்துவரின் அறிவுரை. இரக்கமற்ற வார்த்தைகள்...பசியால்  குழந்தை  இடை விடாது  அழும், ஆனால் பால் கூடாது ..என்ன கொடுமை ..அழுது அழுது அயர்ந்து போய் மயக்கத்திலேயே இருப்பான் அவன். உயிர் காக்கும் திரவங்கள்  குழாய்கள் மூலம் செலுத்த பட்டு கொண்டிருந்தன. தீவிர கண்காணிப்பு பிரிவில்  ஒரு வாரம்  இருந்தான் குழந்தை. கண்ணீர் வற்றி போய், மனமும்  பாறையாக  இறுகி போயிருந்தது. எப்படியாவது பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்ற வெறி மட்டும் தான் அப்போது மனதில் இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து மூக்கில் இருந்த குழாய் எடுக்கப்பட்டது. பால் ஒவ்வாமை மற்றும் இரத்தத்தில் சர்க்கரை  அளவு மிகுந்து இருந்ததால் தாய் பால் கொடுக்கக கூடாது என்று காதில் இரும்பை காய்ச்சி ஊற்றினார் மருத்துவர். இறக்குமதி செய்யப்பட்ட தனிவகையான ஒரு உணவுதான் அவனுக்கு.

  அவன் உடல் நிலையில் மருத்துவர்கள் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை. அறுவை சிகிச்சை தோல்வி என்றனர். மீண்டும்  ஒரு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ஆனால் குழந்தை அதை தாங்குவதற்கு சிறிது நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றனர், அதுவரை வயிற்றில் உள்ள குழாயை அகற்ற முடியாது என்று கூறி விட்டனர்.


பொது வார்டுக்கு வந்து விட்டோம். இவனையும் சேர்த்து பதினாறு குழந்தைகள். இவன் தான் அவர்களில் மிக சிறிய குழந்தை. எதுவுமே  நடக்காத மாதிரி கையையும் காலையும் உதைத்து விளையாடுவான். கண்களை உருட்டி உருட்டி பார்ப்பான். காலையிலும் மாலையிலும் மருத்துவர் குழு வரும். அவர்களை தன் வயிற்றில் கை வைத்து பார்க்க விடாமல் கையாலும் காலாலும் உதைப்பதை பார்த்து ஒரு மருத்துவர் அவனை "ரஜினிகாந்த்" என்று கொஞ்சுவார். அவனுகென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமும் சேர்ந்தது. இவன் கைகால்களை அசைத்து விளையாடுவதால் கையில் உள்ள ஐவி குழாய் கழண்டு விடும். டாக்டர்கள் மீண்டு அதை பொருத்தும்போது வலியில் கத்தி அழுவான். பிறகு திரும்ப விளையாட்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை சொல்லாமல் சொல்லும் அவன் சேட்டைகள்.



நாட்கள் கழிந்து வாரங்கள் ஆனது. அந்த வார்டில் இருந்த பிற நோயாளி குழந்தைகள் நலமாகி வீட்டிற்கு  திரும்ப செல்லும் போது    நான் என் பிள்ளையை கூட்டிக்கொண்டு எப்போது இங்கிருந்து போக போகிறேன்  என்று ஏக்கமாக இருக்கும். எனக்கும் பிரசவமாகி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில் சரியான ஒய்வு இல்லாமல் உடல் சோர்வும் சேர்ந்து கொண்டு மனசோர்வை அதிகமாக்கி கொண்டிருந்தது. 

அவனுக்கு நாற்பத்தைந்து நாட்கள் ஆகும் போது அடுத்த அறுவை சிகிச்சை. திரும்பவும் அதே  கெட்ட கனவை வாழ்ந்து பார்க்கும் கொடுமை. இந்த முறை இவன்  "வளர்ந்து" விட்டதால் அழுகையும் அதிகமாக இருந்தது. வலியாலும், பசியாலும் அவன் அழும் பொது மனம் துவண்டு போகும். எதற்கு என்  குழந்தைக்கு மட்டும் இந்த சோதனை ...விடை தெரியாமல் சிந்தித்து சிந்தித்து மனம்  ஓய்ந்து போனது. 

  ஒரு நாள் மதிய நேரம். ஆறாம் மாடியில் உள்ள அறையில் அவனுக்காக உணவு தயாரிக்க சென்று இருந்தேன். குழந்தை நோயாளிகள் உள்ள அறைகளில் சாப்பிட கூடாது.   சுகாதாரம் கருதி உணவை சூடாக்கும் வசதியும் கொடுக்க படவில்லை. ஆறாம் மாடியில் உள்ள அந்த பொதுவான அறையில் தான் மற்ற எல்லாரும் உணவு தயாரிக்க வேண்டும், சாப்பிட வேண்டும். அங்கிருந்த மின்சார அடுப்பில் குழந்தைக்கான உணவை தயாரித்து கொண்டே அழுது  கொண்டிருந்தேன். என்னவோ தெரியவில்லை அன்று ரொம்ப மன சோர்வாக இருந்தது. அழுகை நிற்கும் வகையாக தெரியவில்லை. 

தோளில் ஆதரவாக  ஒரு கை, திரும்பி பார்த்தேன், இருபத்தியைந்து வயது இருக்கும், என்னை போலவே ஒரு பெண்.

"மகனா?" என்று கேட்டாள். ஆமாம் என்று தலையாட்டினேன். அந்த அறைக்கு பெரும்பாலும் தம் பிள்ளைகளை சேர்த்து இருக்கும் தாய்கள்  தான் வருவார்கள். 

"எனக்கும் தான்" என்றாள். என் காதில் விழவில்லையோ? 

"என்ன ஆயிற்று குழந்தைக்கு ?" என்று மிகவும் கனிவாக கேட்டாள் .

அவ்வளவு தான், மடை திறந்த வெள்ளம் போல் என் மனதில் இருந்த சோகத்தை கொட்டினேன் , என் பிள்ளை படும் பாட்டை விவரித்து அழுதேன்.

"கவலை  படாதே ...அடுத்த அறுவை சிகிச்சை செய்தாயிற்று அல்லவா ..எல்லாம்  சரியாகி விடும் .." என்று மென்மையாக சொன்னாள் 

"இல்லை" என்றேன்  நான். "இது  கூட தாற்காலிகமானது தான்..  ஐந்து அல்லது ஆறு வயதில் மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாம்." என்றேன் தேம்பியபடி.

"அப்போது சரியாகிவிடும் அல்லவா .." என்றாள் 

"அப்படிதான் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்" என்றேன் .

"அவ்வளவு தானே ..இன்னும் சில வருடங்கள் தானே ..கண்டிப்பாக குழந்தை தேறி விடுவான். தைரியமாக இரு ..மனதை தேற்றி கொள் ..குழந்தையை நல்லபடியாக பார்த்து கொள் " என்றாள். 

எனக்கு வெறுமையாக இருந்தது. சொல்லுவது சுலபம். அனுபவிப்பவர்களுக்கு  தானே வலி தெரியும், இவளுக்கு என்ன புரிய போகிறது? 

"நீங்கள் ...? இங்கே, எங்கே .?  நான் ரொம்ப நாட்களாக இருக்கிறேன் ..ஆனால் உங்களை பார்த்ததில்லை ...?" பார்வையாளராக இருப்பாள் போலும் என்று நினைத்தபடி கேட்டேன். அவள் நகைகளையும் சேலையும் பார்க்கும் பொது நல்ல பணக்கார வீட்டு பெண் போல தெரிந்தது.


"நான் எட்டாம் எண் அறையில் இருக்கிறேன், என் மகனுடன் " என்றாள் . நான் நினைத்து சரிதான். அது விஐபிகளுக்கான அறை. வசதியான பெண் தான்.

"என்ன வயது உங்கள் மகனுக்கு"

"நாலு மாதம்"

"என்ன ஆயிற்று குழந்தைக்கு?" 

சுரம் அல்லது வயிற்று போக்கு மாதிரி எதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தேன். 

"இரத்த புற்று நோய்" என்றாள்.

"என்ன ...?" அதிர்ந்து போனேன்.

"குணமாக்க  முடியாது என்று சொல்லிவிட்டார்கள் ..இன்னும் ஒன்று இரண்டு மாதங்கள் உயிரோடு இருப்பானாம்.." அமைதியாக சொன்னாள் ..

என் கண்களில் நின்றிந்த கண்ணீர் மீண்டும் பெருக ஆரம்பித்தது. என்னால் கேட்கவே முடியவில்லையே. இவளால் எப்படி தாங்க முடிகிறது ...

"திருமணமாகி ஏழு வருடம் கழித்து தான் பிறந்தான். ...அடிக்கடி சுரம் வந்து கொண்டே இருந்தது. டைபோய்ட், மலேரியா,  காமாலை என்று எதுவும் இல்லை என்ற பிறகு, எதற்கும் பார்ப்போமே என்று சந்தேகத்தோடு மருத்துவர்கள் புற்று  நோய்க்கான டெஸ்ட் செய்து பார்த்தனர். இரண்டு வாரங்கள் தான் முன்பு தெரிந்தது. முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். இருந்தாலும் பெரிதாக நம்பிக்கை ஏதும் கிடையாது...? என்றாள்.

அவள் கண்கள் வறண்டு இருந்தன. "அழாதே...." என்று என் கண்களை துடைத்து விட்டுவிட்டு  சொன்னாள். "ஐந்தாறு வருடங்கள் நிமிடமாக கடந்துபோய் விடும். உன் பிள்ளை சீக்கிரமே  தேறி விடுவான்..அதன் பின் பெரிய ஆளாக வருவான் பாரேன். இங்கேயே கூட மருத்துவராக திரும்பி வருவான்  " என்றாள்.

என்னை தேற்றுகிறாளே, நான் என்ன என்று அவளுக்கு ஆறுதல் சொல்லுவது? இடி போன்ற துயரத்தை தாங்கி கொண்டு அமைதியாக நிற்கும் பெண்ணை பார்த்து தேறுதல் சொல்ல வார்த்தை இல்லாமல் ஆடி போய் நின்றேன். ஆம், என் மகன் தேறி விடுவான். என் துன்பம் இவள்  எதிரில் இன்றுமே இல்லை.

சிறிது நேரம்  கழித்து திரும்பி வந்து போது வழக்கம் போல  கை காலை உதைத்து கொண்டு சிரித்து கொண்டிருக்கும் என் பிள்ளையை  பார்த்தேன்.. 

"என் செல்லம்..உனக்கு ஒன்றும் இல்லை ..சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும்" என்று வாரி அணைத்து புன்னகையுடன் முத்தமிட்டேன்.

இன்று அவன் வளர்ந்து மருத்துவக் கல்லூரியில் படிக்கிறான், மருத்துவர் அங்கியை அணிந்து கொண்டு பெருமையாக நடமாடும் போது ஏனோ அந்த பெயர் தெரியாத தாயின் முகமும் வாழ்த்தும் நினைவிற்கு வருகிறது. 

 

Thursday, January 5, 2012

புத்தகத்தை தேடி

 வேலை நிமித்தமாக கத்தார் வந்து சிறிது காலம் ஆகின்றது, தனியாக இருக்கிறேன், குடும்பம்  சென்னையில். வயதின் காரணமோ அல்லது வளர்ப்ப்பின் காரணமோ தெரியவில்லை பார்ட்டிகளுக்கு  போவதிலோ   அல்லது   ஓயாமல் ஷாப்பிங் செய்வதிலோ எனக்கு  நாட்டம் இல்லை.   நண்பர் வட்டமும் இங்கு மிகவும்  குறைவு.  சென்னையில் இவ்வாறு தனிமை கிடைப்பது மிக மிக அரிது. அப்படி கிடைத்தால் உடனே குஷியாக ஹிக்கின்போதம், ஒடிசி அல்லது லாண்ட்மார்க் சென்று விடுவேன்.  பல  நாட்களாக வாங்க நினைத்திருந்த  புத்தகங்களை வாங்கி வருவேன். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல்,   குளிக்காமல்,  சமைக்காமல், அகப்பட்டதை கொறித்துக்கொண்டு  படித்துக்கொண்டே  இருப்பேன். சில சமயம் பசங்களும் பெரியவர்களும் இல்லாமல் நானும் கணவரும் மட்டும் வீட்டில் இருக்கும் நாட்கள் உண்டு. அப்போதும் இப்படிதான்.  அவரும் பெரும்பாலும் நான் அவரை தொந்திரவு செய்யாதவரை கண்டு கொள்ள மாட்டார். தூங்காமல்    நள்ளிரவில் படித்தால் மட்டும் கடிந்து கொள்வார்.

இந்த முறை  திடீரென்று கிளம்பி வந்ததால் நான் புத்தகம் எதுவும் கையில் கொண்டு வரவில்லை. எப்போதும் இது போன்ற பயணங்களில்  விமான நிலையத்தில் கண்டிப்பாக ஏதேனும் புத்தகம் வாங்கி  விடுவேன். இந்த முறை நான் மிகவும் தாமதமாக விமான  நிலையதிற்கு   வந்ததால் அதற்கும் நேரமில்லை. சரி  தோஹாவில்  எதாவது கடையில் வாங்கி கொள்ளலாம்  என்று நினைத்தேன்.  ஆனால்   இங்கே வந்த பின் தான் தெரிந்தது அது அப்படி ஒன்றும் சுலபமில்லை என்று.     தோஹாவில்   புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலுவலகத்தில் கேட்ட போது சிலர் என்னை விசித்திரமாக பார்த்தனர்.  வேறு சிலர் எதற்கு புத்தகம் வாங்க வேண்டும் என்று கேட்டனர். இன்னும் ஒருவர் இங்கு புத்தக கடையே தேவையில்லை, ஏனென்றால் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு தேவையான      புத்தகங்களை தந்து விடுவார்கள் என்று பெருமையாக சொன்னார்.  அவருக்கு பள்ளி     பாட  புத்தகங்களை தவிர வேறு புத்தகம் இருப்பதே தெரியவில்லை, புரியவும் இல்லை.  இன்னொருவர்   இணைய தளத்தில்  பார்த்து கொள்ளுங்களேன் என்றார். 

எனக்கு இணைய தளத்தில் படிப்பதில்அல்லது புத்தகம்  தேடுவதில்   ஆர்வமில்லை.  ஒரு புத்தகக்கடையில் புத்தகத்தை புரட்டி புரட்டி பார்த்து தேர்ந்து எடுக்கும் சுகம் அதில் கிடைக்குமா? அல்லது நூலகத்தில் கை நிறைய அள்ளிக்கொண்டு   வரும்   பூரிப்பிற்கு   இணையாகுமா? 

சென்னையில் தான் எவ்வளவு நூலகங்கள் - கன்னிமாரா ,  பிரிட்டிஷ் கௌன்சில், மட்டும் அரசு மாவட்ட நூலகங்கள்.. இன்னும் நான்  கோட்டூர்புறத்தில்   உள்ள புதிய பிரமாண்டமான நூலகத்திற்கு செல்லவில்லை.  நான் போவதற்கு முன் அது மருத்துவமனையாக  மாறி விடுமோ தெரியவில்லை ..இதை தவிர அங்கங்கே எண்ணற்ற தனியார் நூலகங்கள். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்  தெருக்களில்  கிடைக்கும் அந்த பழைய  புத்தகங்கள், அடையாரில் இருக்கும் முருகன் லைப்ரரி... ஆஹா  நினைக்கும் போதே இனிகிறதே. இப்போதுதான்    தெரிகிறது சென்னையின் அருமை. ஒன்றுமே இல்லை என்றால் தெருவோரத்தில் ஏதேனும் வாராந்தரி  பத்திரிக்கையாவது கிடைக்கும்.. ஆனால் இங்கு...?  ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் வளர்ச்சி என்பது என்ன ?  மிக  உயரமான   கட்டிடங்கள்,  அதி நவீனமான புதிய  கார்கள், தங்கு தடை இல்லாத  மின்சாரம்,  தண்ணீர்,  மனிதற்கு  மாற்றாக  கருவிகள்,   எதற்கு  எடுத்தாலும்  கணினிகள்,  நீண்ட அகன்ற  சாலைகள், உணவு விடுதிகள், ஷாப்பிங்  மால்கள் இவை மட்டும் தானா? மனது ஒப்புகொள்ள மறுக்கின்றது.   புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.   இவ்வளவு  பெரிய  ஊரில்  ஒரு  நல்ல   புத்தக  கடை இல்லையே என  நினைக்கும் போது  இங்கு  இருப்பவர்கள்   எவ்வளவு இழக்கிறார்கள் என்று வருந்துகிறேன்.  இங்கு வளரும்  குழந்தைகள் எப்படி புத்தகம் படிப்பார்கள்? அவர்களுக்கு எப்படி அந்த  பழக்கம் ஏற்படும்? புரியவில்லை.

சரி இப்படி புத்தகம் தேடிக்கொண்டு  நான் மட்டும்  ஏன் வித்தியாசமாக  இருக்கிறேன்  என்று யோசித்தேன்.  இந்த பழக்கம் சிறு வயதில் என் தந்தை ஏற்படுத்தியது.  சிறு வயதில்   எனக்கு  அப்பா  என்றாலே  அப்பாவும் அப்பாவின் கையில் உள்ள புத்தகமும் தான் நினைவுக்கு வரும். அம்மாவும் படிப்பார், ஆனால்  அப்பா படிக்கும் விதமே அலாதியானது. காலையில் சீக்கிரம் எழுந்து காலைகடன்களை  முடித்துவிட்டு பேப்பர் போடுபவன் வருகைகாக தயாராக காத்திருப்பார். பேப்பர் வந்தவுடன் எடுத்துகொண்டு வீட்டில் பின் புறத்தில் உள்ள வெந்நீர் அடுப்பின் பக்கம் சென்று அமர்ந்து கொள்வார். அவரையும் சேர்த்து வீட்டில் ஏழு உருபிடிகள்.. சில நேரம் விருந்தினர் வந்தால் பத்து பேர் கூட இருப்போம். எல்லோரும் குளித்து முடிக்கும் வரை அந்த சுள்ளி அடுப்பையும் பார்த்துகொண்டு, அன்றைய தினசரியையும் படிப்பார். அதே நேரம் வேலிக்கு அந்த புறம் பக்கத்து வீட்டில் அவருடைய நண்பரும் இருப்பார். இருவரும் படித்துக்கு கொண்டே கார சாரமாக விவாதிக்கவும் செய்வார்கள்.

மாலை அலுவல் முடிந்து வீடு வரும் போது ஏகப்பட்ட  பத்திரிகைகளுடன்  வருவார்.   எல்லா  வயதினர்க்கும் ஏற்ற வகையில் அதில் புத்தகங்கள் இருக்கும். அம்புலி மாமா, பாலமித்ரா, அமர்சித்ர கதை, குமுதம், விகடன், கல்கண்டு, கல்கி, சாவி, அமுதசுரபி,  இதயம் பேசுகிறது, மங்கை, கதிர், ராணி, தேவி, காமிக்ஸ், மற்றும் பல ஆங்கில பத்திரிகைகளும் அடங்கும்.  என் தந்தை  நெய்வேலியில்  பழுப்பு  நிலக்கரி   நிறுவனத்தில்  சாதாரண  வேலையில்  தான்   இருந்தார். ஆனாலும்   புத்தகங்களுக்கு  வீட்டில் வஞ்சனையே கிடையாது.  சிறு வயதில் அதன்    அருமை தெரியவில்லை இருந்தாலும் இப்போது நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது,   அவருடைய சொற்ப சம்பளத்தில் அவர் புத்தகங்களுக்கு  எவ்வளவு   மதிப்பளித்தார்    என்பது இப்போது தான் புரிகின்றது


தினசரி, வார மற்றும் மாதந்திர பத்திரிகைகள் வாங்குவது மட்டும் அல்லாது அருகில் உள்ள நூல் நிலையத்தையும் அவர் விட்டதில்லை. வாரம் ஒருமுறை சென்று ஆங்கில புத்தகங்கள் மற்றும் தமிழ் புத்தகங்கள் எடுத்துவருவார். வீட்டில் எல்லாரையும் கேட்பார் அவரவர்க்கு ஏதேனும் புத்தகம் தேவையா என்று. சில நேரம்  பாட சம்பதமாக  புத்தகம் தேவையாக இருந்தாலும் எடுத்துவருவார்.  அவர் அவருடைய நண்பர்களும் சொல்லி வைத்து கொண்டு சில ஆங்கில நாவல்களை தேடி தேடி படிப்பார்கள்.  பின்னர் இரவு நேரத்தில் எங்கள் வீடு வாசலில் கூடி கூடி விவாதிப்பார்கள்.

 அவர் நூலகம் செல்லும் போது அம்மா அவருடன்  யாரையாவது  கண்டிப்பாக அனுப்பி வைப்பார்.  இல்லை என்றால் அவர் நூலகம் மூடும் வரை வீடு திரும்ப மாட்டார்.  தன்னை மறந்து படித்து  கொண்டிருப்பார்.   அதனால் ஒருவர் அவருடன் கூடவே   போய்,   அவரை  சரியான  நேரத்தில்  நினைவுபடுத்தி   வீட்டிற்கு  கூட்டி   வர  வேண்டும்.  பெரும்பாலும் அது நானாகத்தான் இருப்பேன். ஏனென்றால் நான் வீட்டிற்கு கடைசி, மேலும் என்னை மேய்ப்பது அம்மாவுக்கு கஷ்டம்.  இப்படியாக      ஆரம்பித்தது புத்தகங்களுடனான என்னுடைய உறவு.

நெய்வேலியில் பத்தாம் ப்ளோக்கில் இருந்தது அந்த பெரிய நூலகம்.  அதுவும்  பழுப்பு  நிலக்கரி  நிறுவனத்தினுடயதுதான். எங்கள் வீட்டின் அருகில் தான் இருந்தது.  சிறுவர்களுக்கான  ஒரு பகுதியும் அதில் உண்டு.  அப்பா  என்னை கொண்டு  அந்த  பகுதியில்  விட்டு   விடுவார்.   நான் முதலில் படிக்கச் தொடங்கியது "டின் டின்" காமிக்ஸ் தான். இப்போது கூட அந்த வால் பையனும், துரு துரு வென்ற நாய்குட்டியும்,    என்னால்  மறக்க  முடியவில்லை.  அப்புறம் இரும்புக்கை மாயாவி,  Phantom   போன்ற கதைகளும் என்னை வெகுவாக கவர்த்திருந்தன.  பின்னர் நாலாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு போகும் வயதில் நான்சி துருவ், ஹார்டி பாய்ஸ், எனிட் ப்ளிட்டன்  போன்ற கதைகள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.  இது தவிர தமிழில் வரும் அம்புலி மாமா, பாலமித்ரா, சமபக் போன்ற வற்றையும் விட்டு வைத்ததில்லை. அவையெல்லாம் இப்போது வெளி வருவதில்லை என்று நினைக்கிறேன். வருத்தமாக இருக்கிறது.


நான் படித்த பள்ளியில் பெரிய நூலகம் இருந்தது. ஆங்கில பள்ளி ஆதலால்   பெரும்பான்யமான   புத்தகங்கள் ஆங்கிலமாகவே இருக்கும். எல்லா  வகையான புத்தகங்களும் இருக்கும்.  தமிழ் ஆசிரியாரின் சிபாரிசின் படி சில  நல்ல  தமிழ் நூல்களும் இருக்கும்.  ஆறாம் வகுப்பு முதல் பள்ளி நூலகத்திலும் அனுமதி உண்டு. அந்த வயதில் நான் மு வரதராசன், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் எழுத்துகளை படித்தேன் என்றால் என்னாலேயே இப்போது நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் என தமிழாசிரியர் நடராஜன் தான்.  நடராசன் என்று சொல்ல வேண்டும், இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும். ஒவ்வொரு வாரம் சில குறிப்பிட்ட புத்தகங்களை படிக்க சொல்லுவார். படித்து விட்டு அதிலிருந்து வீட்டு பாடம் எழுதி வர வேண்டிய  வேலையும்   கொடுப்பார்.  இராஜாஜியின்  சக்கரவர்த்தி  திருமகன் , மற்றும் மகாபாரதம் ,  பாரதியின்  பாஞ்சாலி   சபதம்,  இப்படி  எத்தனையோ  புத்தகங்கள் அவற்றின் அருமை  பெருமை  புரியாமலே  படித்தேன்.

ஆங்கிலத்தில் Tale of  two  cities , Prisioner   of zenda, , Adventures  of  Tom  Sawyer ,  David  copperfield ,  Three  Musketters   என்று  முதலில் ஆரம்பித்தது. பின்னர் பருவ கோளாறில்  mills  and boon  நாவல்களில் வந்து நின்றது. ஒரு கட்டத்தில் காதல் கதைகளை திகட்ட திகட்ட படித்தேன். பின்பு அப்பாவின் உந்துதல் பேரில்   James Hardly  Chase ,  Agatha  Christie  ஆகியோரது  நாவல் கள்  படிக்க  ஆரம்பித்தேன் . கூடவே தமிழில் சுஜாதா, மதன், ஜானகி ராமன், அகிலன், லக்ஷமி, சிவசங்கரி, கல்கி ஆகியோரும் எனக்குள் வளர்ந்தார்கள்.. இதில் சிவசங்கரியின் நண்டு, பாலங்கள் ஆகிய கதைகள் மனதில் இருந்து  இன்னும்  அகலாதவை. பிறகு கல்லூரி நாட்களில் Irwin  Wallace , Robert  Cook ,  Jeffery  Archer   என்று வளர்ந்தது.  பிறகு வேலைக்கு சென்ற போது   சுய முன்னேற்ற புத்தகங்கள் பக்கம் கவனம் திரும்பியது. அப்புறம் நிறைய சுயசரிதைகள்.  இன்று   Ken Follet   இன்   "Fall  of  the  giants "   இல் வந்து  நிற்கிறேன். 

இப்போது கதைகளில் நாட்டம் குறைந்து விட்டது, வரலாறு மற்றும் ஆய்வு கட்டுரைகள் மிகவும் பிடிக்கின்றன.  அதே நேரத்தில் சிறு வயதில் படித்த புத்தகங்களை இப்போது படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை மீண்டும்  படித்தேன், மலைத்தேன்; எவ்வளவு வரலாற்று சமாசாரம் இருக்கிறது. மீண்டும் எல்லா பாகங்களையும் படிக்கச் வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆனால்  இன்றைய தலைமுறையிடம் படிக்கும் பழக்கமே இல்லாமல்  போய்  விடுமோ என்று பயமாக இருக்கிறது. எப்போதும் இணையத்தளம் மற்று கைபேசி துணையுடனே இருக்கிறார்கள். என்    பிள்ளைகளை புத்தகம் படிக்க பழகுவதற்கு படாத பாடு பட்டேன். தினமும் இரவில் கையில் ஒரு புத்தகத்தோடுதான் படுக்க வைப்பேன். தூங்குவதற்கு முன் கண்டிப்பாக எதையாவது படிக்க வேண்டும். காலையில் தினசரியை  கண்டிப்பாக படிக்க வேண்டும். வாரம் ஒரு முறை நூல் நிலையம் அழைத்து செல்வேன். எது வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஏதாவது படிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன்.  ஆனால் நான் நிறைய முயற்சி செய்தும் என் மகளை என்னால் புத்தகங்கள் படிக்க  வைக்கவே   முடியவில்லை. அவளை தொலைக்காட்சி மற்றும் கைபேசிடம் இருந்து மீட்க முடியவில்லை.  நிறைய கோவப்பட்டு  பின்னர்  விட்டு   விட்டேன்.   ஆனால் என் மகனிடம் வெற்றி கண்டு விட்டேன் என்றே சொல்ல வேண்டும்.  அவன் நிறைய புத்தகங்கள் படிக்கிறான் என்பதை விட பல தரப்பட்ட நூல்களை  படிக்கிறான்  என்பதே  எனக்கு மன திருப்தியை தருகின்றது. நான் இங்கே புத்தகங்கள் கிடைக்காமல் வருத்த படுவதை கேள்விப்பட்டு அடுத்த வாரத்தில் நண்பர்  மூலமாக அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறான். நானும் காத்திருக்கிறேன். 


Saturday, August 27, 2011

நடு நிசியில் அப்பாவின் அலறல்

"அய்யோ..அய்யோ.. திருடன் ..திருடன்..ஓடறான் ஓடறான் ...போலீஸ் போலீஸ்....புடி புடி" என்று ஒரு அலறல் கேட்டு திடுக்கென எழுந்தேன் நான். ஆனால் பயப்படவில்லை. இரவு சுமார் ஒரு மணி இருக்கும், என் அப்பாதான் தூக்கத்தில் அலறி கொண்டிருந்தார். மெல்ல படுக்கை அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தேன். தொலை காட்சி பெட்டி இருக்கும் அறையில் இருந்த சோபாவில் அப்பா படுத்து கொண்டு கத்தி கொண்டிருந்தார். நான் அப்பா அருகில் சென்ற போது அம்மாவும் அங்கே வந்து விட்டாள். "உன் தூக்கமும் கெட்டதா?...போய் படு நாளைக்கு நீ வேலைக்கு போக வேண்டுமே" என்றாள். அங்கே சிறிது நேரம் நின்று விட்டு அப்பா அலறலை நிறுத்தியதும் மீண்டும் படுத்தேன்.

தூக்கத்தில் நடப்பவர் உண்டு, பேசுபவர் உண்டு. என் மகன் கூட தூக்கத்தில் முழு பாடத்தையும் ஒப்புவிப்பான் ஆனால் பரிட்சையில் எழுத மாட்டான் என்பது வேறு கதை. என் அப்பா வித்தியாசமானவர், தூக்கத்தில் உச்ச குரலில் அலறுவார். அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான அலறல் தான், "அய்யோ..அய்யோ.. திருடன் ..திருடன்..ஓடறான் ஓடறான் ...போலீஸ் போலீஸ்....புடி புடி" என்று. வீட்டிற்கு புதிதாய் வருபவர்கள் அரண்டு விடுவதுண்டு.

என் அப்பா சுபாவமாக மென்மையானவர், அதிர்ந்து பேச மாட்டார், அதட்ட மாட்டார். அதனால் அவர் இரவில் பெருங்குரலில் கத்துவது விசித்திரமாக இருக்கும். கேட்டால் "பயங்கரமான கெட்ட கனவு" என்பார். அதெப்படி ஒரே கனவு திரும்ப திரும்ப வரும், நல்ல கனவே வராதா என்று கேட்டால் குழந்தையை போன்று திரு திருவென முழிப்பார். 

பொதுவாக வயதானவர்கள் புராண கதைகளையும், பழைய படங்களையும் விரும்பி பார்ப்பார்கள், ஆனால் என் அப்பா நேர் விரோதம். பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு புது புது படங்களாய் தான் பார்ப்பார். தமிழ், இந்தி, ஆங்கிலம் இவற்றில் சண்டை, பேய், பிசாசு, மர்மம், துப்பறிவு இப்படித்தான் பெரும்பாலும் இருக்கும். இது மாதிரியான ஆங்கில நாவல்களையும் விரும்பி படிப்பார். கிருஷ்ணா ராமா என்று இருக்காமல் சினிமா சினிமா என்று இருக்கிறாரே என்று அம்மா அங்கலாய்ப்பாள். அவருக்கு கல்லூரிக்கு போகும் வயதில் நான்கு பேரன்கள். நால்வரில் ஒருவன் தினமும் ஏதாவது புத்தகமோ திரைப்பட தகடோ கொடுத்துவிடுவான், ஏதோ வேண்டுதலை நிறைவேற்றுவது போல இவரும் குதூகலமாய் ஒரே மூச்சில் முடிப்பார்.  "ஏன்டா அந்த மனுசனை கெடுக்குறீர்கள்" என்று பேரன்களை வைது கொண்டிருப்பாள் அம்மா. இப்படி சினிமாவும், நாவல்களும் படிப்பதால் தான் கெட்ட கனவு வருகின்றதோ என்று கேட்டால் அதற்கும் கனவுக்கும் சம்பந்தமே இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்.      

ஒரு முறை என் கணவர் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்தார். மருமகன் மீது ரொம்ப அன்பு கொண்டவர் அப்பா. அடமாக தான் போய் இரவில் துணைக்கு படுத்துகொள்வதாய் சென்று விட்டார். பாவம் அடுத்த அறையில் இருந்த நோயாளிக்கு மறு நாள் ஜன்னி வந்து விட்டதாம்.   

இன்னொரு வேடிக்கையும் உண்டு. அவர் கத்தும் போது யாராவது அருகில் சென்று எழுப்பினால், அவர்களையே திருடன் என்று பிசாசு பிடி பிடித்துவிடுவார். விடுவித்துக்கொள்ளவே முடியாது.

அந்நியன் படம் வெளிவந்த போது நிறைய பேர் என் அப்பாவிற்குள்ளும் ஒரு அந்நியன் இருப்பதாய் சொன்னார்கள். பின்பு ஏன் மருத்துவரிடம் காண்பிக்கவில்லை என்று கேட்பீர்கள்.  அதற்கும்  காரணம் உண்டு.   ஏன் என்றால் அப்பாவின் நடு நிசி அலறலால் பல நன்மைகளும் உண்டு.

ஒரு முறை அப்பா என் அத்தை அதாவது தன் அக்காவின் வீட்டிற்கு சென்று தங்கினார். அன்று இரவு இவர் போட்ட சத்தத்தில் அத்தை பெண் பயந்து, கண்கள் நிலை குத்தி போய் வார்த்தையும் வராமல் இருக்க, உடனே அவர்கள் நடு இரவில் பேயொட்டியை கூப்பிட்டு வந்து அவளுக்கு வேப்பிலை அடித்து பரிகாரமும் செய்தார்கள்.   பின்னர் ஒரு நாள் அத்தையிடம் கேட்டேன், "உனக்கு உன் தம்பி பற்றி தெரியாதா.. ஏன் உன் வீட்டாரிடம் கூறவில்லை?". "நன்றாயிருக்கிறதே, என் தம்பியை புகுந்த வீட்டில் விட்டு கொடுக்க முடியுமா?" என்று சொன்னாள் என் பாசமலர் அத்தை. அது மட்டுமல்லவாம், பெயில் ஆகி கொண்டிருந்த அத்தை பெண் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நன்றாக படிக்க ஆரம்பித்து விட்டாளாம். இப்போது என் அத்தை பெண் அரசு பணியில் இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் என் அப்பாவின் கனவுதானாம்.  இந்த நம்பிக்கையுடனேயே  என் அத்தையும் போய் சேர்ந்து விட்டாள்.   

மேலும் அவருடைய இந்த கத்தலால் எங்கள் வீட்டில் எப்போதும் திருட்டு பயம் இருந்ததில்லை.  என் பள்ளி பருவத்தில் நாங்கள் இருந்த வீட்டில் மாமரங்கள் இரண்டு இருந்தன. இரண்டுமே நன்றாய் காய்ப்பவை. அவை காய்த்திருக்கும் காலத்தில் அப்பா வீட்டிற்கு வெளியே திண்ணை போன்ற ஒரு இடத்தில் படுத்து கொள்ளுவார். மாங்காய் திருடர்கள் மற்ற இடங்களில் கை வரிசை காட்டுவர். ஆனால் எங்கள் வீட்டில் ஒரு மாங்காய் கூட திருட்டு போனதில்லை. இவர் இரவில் விட்டு விட்டு அலறுவதால் கீழே விழுந்து கிடக்கும் பழத்தை எடுக்க கூட ஒரு பயலுக்கும் துணிவு இருந்ததில்லை.

 
இப்பொதும் என் பெற்றொர் சென்னையில் வசிக்கும் எட்டு வீடுகள் கொண்ட குடியிருப்பிலும் திருட்டு பயம் கிடையாது என்றால் அதற்கு காரணம் அப்பாதான். ஏன் சொல்கிறேன் என்றால் பக்கத்து குடியிருப்புகளில் உள்ள வீட்டில் எல்லாம் இரவில் திருட்டு போயிருக்கிறது,  ஆனால் இவர்கள் குடியிருப்பில் பதினைந்து வருடமாக திருட்டென்பதே கிடையாது. இத்தனைக்கும் இரவில் வாட்ச்மேன் கூட அவர்கள் வைத்ததில்லை. கீழ் தளத்தில் தெருவிற்கு சமீபமாக உள்ள அறையில், சன்னல் அருகே இருக்கும் கட்டிலில் தான் என் அப்பா எப்பொதும் தூங்குவார். திருடன் வருவதற்கு முன்பே இவர் அவ்வபோது கத்திவிடுவதால் திருடர்கள் வருவதில்லை என்று அம்மா சில சமயம் பெருமை படுவாள்.

அது மட்டுமல்ல, அக்கம் பக்கத்திலும், சொந்தத்திலும் பத்திரமான இடம் என்று நினைப்பது என் அப்பா படுத்திருக்கும் அறையில் உள்ள பீரொவைதான்.  ஒரு அவசரத்திற்கு பணம், நகைகளை பத்திரமாக அதில் தான் வைத்து விட்டு போவார்கள். தங்கள் வீட்டில் கூட வைத்துகொள்ள மாட்டார்கள். ஏன், என் கணவருமே அப்படிதான் செய்வார்.

எங்கள் வீட்டு பேர பிள்ளைகள் எல்லாம் இவர் இரவில் அலறுவதை சிறு வயது முதலே கேட்டு கேட்டு வளர்ந்ததால், அவர்களுக்கு பேய், பிசாசு, காத்து, கருப்பு போன்ற பயமே கிடையாது. தைரியசாலிகளாக வளர்ந்து திரிகிறார்கள்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல, என் அப்பாவின் நடு நிசி அலறலும் எங்கள் குடும்பத்திற்கு நன்மையே செய்திருக்கிறது!!

 

Friday, August 26, 2011

அம்மாவும் அப்பமும்

என் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் அப்பம் என்றால் கொள்ளை ஆசை.

ஒவ்வொரு வருடமும் கிருக்ஷ்ண ஜெயந்தி என்றால் எனக்கு பதட்டம் தான். மற்ற பட்ச்சணங்கள் எல்லாம் கூட செய்து விடுவேன், ஆனால் இந்த அப்பம் மட்டும் செய்ய வருவதில்லை. எனக்கு திருமணம் ஆகி இருவது வருடங்கள் ஓடிவிட்டன. மகனும் மகளும் கல்லூரிக்கு  போகின்றனர். ஆனால் இன்றைக்கும் எனக்கு அப்பம் ஒழுங்காக செய்ய வருவதில்லை. ஒவ்வொரு வருடமும் என் அப்பம் மட்டும் என்னை காலை வாரி விட்டுவிடும்.

கிருக்ஷ்ண ஜெயந்திக்கு அரசு விடுமுறை என்பதால் என் கணவரும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பார்கள். நான் தனியார் துறையில் இருப்பதால், எனக்கு   பெரும்பாலும் விடுமுறை கிடைகாது. ஒரிரு மணி நேரம் அனுமதி கேட்டுகொண்டு வீட்டிற்கு வருவதே என் வழக்கம்.

"அம்மா இந்த தடவையாவது ஒழுங்காக அப்பம் செய்வியா?" என்று ஏக்கத்துடன் கேட்பான் என் பிள்ளை. "எதற்கும் உன் அம்மாவை ஒரு தடவை கேட்டுக்கொள்" இது என் கணவர். "எல்லாம் எனக்கும் தெரியும்", என்று நான். எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கும் தோரணையுடன் நிற்பாள் என் பெண். இப்படிதான் ஒவ்வொரு வருடமும் தொடங்கும் நான் அப்பம் செய்யும் கதை.

அப்பத்திற்கு மாவு கரைக்கும் போதே எனக்கு சந்தேகம் வந்துவிடும்.  மைதாவா, கோதுமை மாவா, உளுத்தமாவா அரிசி மாவா என்பது,  அளவும் புரிபடாது. என் பிள்ளை கடைக்கு ஓடுவான், வீட்டில் ஏதாவது பொருள் குறைந்தால்.

எண்ணை காயும் போதே பக்கத்தில் வந்து நின்று கொள்வார்கள், மகனும் மகளும். அடுப்படியை விட்டு நகர மாட்டார்கள். எல்லா கடவுள்களையும் வேண்டி கொண்டு எண்ணையில் நான் கரைத்த மாவை விடுவேன் நான்.

"போச் போச் , இந்த தடவையும் அப்பம் போச்" என்று கத்துவாள் என் மகள். "பாட்டிக்கு போன் போடுடி" என்பான் இவன். "வேண்டாம், நான் நேரில் சென்று அழைத்து வருகிறேன்" என்று வண்டியை எடுத்துகொண்டு ஒடுவார் என்னவர்.

இரண்டு தெருக்கள் தள்ளியிருந்தனர் என் பெற்றொர். மருமகன் கூப்பிட்டவுடன் போட்டது போட்டபடி ஓடி வருவாள் என் அம்மா. அடுப்பில் எண்ணை காய்ந்தபடி இருக்கும். முதலில் அடுப்பை அணைப்பாள். ஒரு சிணுங்கல் இருக்காது. ஏன் முதலில் கேட்கவில்லை என்ற சலிப்பு இருக்காது. நான் கரைத்த மாவில் என்ன குறை என்று கண்டுபிடிப்பாள். நானும் இதுதான் சமயம் தப்பித்தால் போதும் என்று நகர்ந்து விடுவேன். சாமர்த்தியமாக நான் கரைத்த மாவில் ஏதேனும் மாற்றம் செய்து நல்ல அப்பமும் செய்து விடுவாள் அம்மா. முன்பே தயாராக இருந்திருப்பாளோ என்று எனக்கு சந்தேகம் வரும்.

கூடவே தான் செய்து கொண்டு வந்திருந்த அப்பத்தையும் பிள்ளைக்களுக்கு தருவாள். "பாட்டி வீட்டு அப்பத்தின் சுவை தனி தான்" என்று அவர்கள் சொல்லுவதை கேட்கவே எரிச்சலாக இருக்கும் எனக்கு. "உன் அம்மாவும் இதேபோல் அடுத்தமுறை செய்துவிடுவாள் பாரேன்" என்று அவள் பேரனிடம் என்னை விட்டுகொடுக்காமல் சொல்லும்போதும் நான் அவளை கோபத்துடன் முறைப்பேன்.

இந்த வருடம் அம்மா சென்னையில் உள்ள என் அக்கா வீட்டிற்கு சென்று விட்டாள். என் குடும்பத்தில் ரொம்பவே பயந்து போயினர் நான் என்ன அமளி செய்வேனோ என்று. என்னவர் என்னை இந்த முறை விடுப்பு எடுக்க வைத்தார். தன் தமக்கையிடம் கேட்டு தேவையானவற்றை வாங்கி வைத்து விட்டார்.

நான் குளித்துவிட்டு அடுக்களை உள்ளே நுழையும்  போது சரியாக தொலைபேசி அழைத்தது. என் அக்காவின் குரல் பதட்டத்துடன் ஒலித்தது. அம்மாவிற்க்கு  திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக. உடனே எல்லோரும் சென்னைக்கு விரைந்தோம். என் கணவர் காரோட்ட நாங்கள் மருத்துவமனையை அடையும் போது மணி ஆறு இருக்கும்.

அம்மா தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்ததால், ஒருவர்க்கு மட்டுமே அனுமதி கொடுக்கபட்டது. நான் மட்டும் உள்ளே சென்றேன்.  அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துகொண்டேன். மெள்ள கண் விழித்து பார்த்தாள் அம்மா.."அப்பம் செய்தாயா..நன்றாக வந்ததா?" என்று பலகீனமான குரலில் கெட்டாள்.
"நீ இல்லாமல் எப்படி அம்மா அப்பம் நன்றாக வரும்?" என்றேன் நான் கண்ணீருடன், அம்மா மெல்ல சிரித்தாள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே!

இன்று அவன் பிறந்த நாள்.

சரியாக இன்றோடு இருவத்தயிந்து வருடங்கள் ஆகின்றன அவனை பார்த்து. ஆனால் இன்று நடந்தது போலவே மனதில் பசுமையாக உள்ளது. அது கோடை விடுமுறையின் ஒரு மாலை பொழுது. என் வீட்டின் மொட்டைமாடியில் அவன் பெற்றோர்களும்  என் வீட்டாறும்  ஒரு புறம் பேசி கொண்டிருக்க, நாங்கள் இருவரும் மறுபுறம் பேசி கொண்டிருந்தோம் என்று சொல்லுவதை விட  மௌனமாக பார்த்து கொண்டிருந்தோம் என்பதே சரியாக இருக்கும்.

நான் கல்லூரியில்  முதல் வருடம் படித்துகொண்டிருந்தேன். அவன் அதே படிப்பில் வேறொரு ஊரில் மூன்றாம் வருடம். அவனை சந்தித்து சில வருடங்கள் ஆகி இருந்தன. பள்ளிக்கூட நாட்களில் பார்த்தது. அவர்கள் குடும்பமும் எங்கள்  குடும்பமும் நெடுங்காலமாக நண்பர்கள். வேலை நிமித்தம் மாற்றலாகி அவர்கள் எங்கள் சிறிய ஊரிலிருந்து சென்னைக்கு போய் விட்டனர். அன்று அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தனர்.
 
மாடி சிறிய மதில் சுவரின் மேல் ஒரு காலை அந்தபுறமும் மறு காலை இந்த புறமுமாக போட்டு அமர்ந்திருந்தான். நானும் தளர்வாக சுவற்றில் சாய்ந்தவாறு நின்றிருந்தேன். அழகான வாலிபனாக வளர்ந்திருந்தான் அவன்.

ஏதேதோ கேள்விகள் கேட்டான், நான் ஒரிரு வார்த்தைகளில் பதில் அளித்துகொண்டிருந்தேன். ஏன் ஒற்றை பின்னலுக்கு மாறி விட்டாய், இன்னும் சிறிது நாள் தாவணி அணியலாமே, ஏன் அதற்குள் புடவை, நீயும் ஏன் என் படிப்பை தேர்ந்தெடுத்தாய்,  போன்ற கேள்விகள்.

அவன் கண்களில் கனிவும் காதலும் மின்னியதை என்னால் நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை.  சிறிது நேரம்  பேச முடியாமல் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பேச பிடிக்கவில்லையா என்று கேட்டான். அதற்கும் பதில் இல்லை.

ஏன் என் கடிதங்களுக்கு பதில் இல்லை என்று திடீரென கேட்டான். இந்த கேள்வியை எதிர்பார்த்தே நான் பயந்து கொண்டிருந்தேன். என்னுடைய விடுதி முகவரிக்கு அவன் அனுப்பிய கடிதங்கள் அவை. அவன் உள்ளத்தை வெளிபடுத்தி என் சம்மதத்தை கேட்டிருந்தான். படிக்க இன்பமாக இருந்தாலும் பதில் எழுத துணிவில்லை. மிகவும் கண்டிபான, காதல் செய்வது தவறு என்று போதித்து வளர்க்கபட்டு இருந்தேன். இதற்கும் மௌனம் காத்தேன்.

சரி விடு, என் பிறந்த நாள் நினைவிருக்கிறதா என்று கேட்டான். தலைஅசைத்து தேதியை சொன்னேன். சரியாகத்தான் சொன்னேன் இருந்தாலும் அவன் முகத்தில் ஏமாற்றம் கலந்த வருத்தம்,ஆயாசம்.  ஏனென்று எனக்கு புரியவில்லை.

என் பெயருக்கு ஒரு பொருள் உண்டு தெரியுமா என்று கேட்டான். எனக்கு தெரியவில்லை. சூரியனை குறிக்கும் வடமொழிசொல் தான் என் பெயர் என்றான். நீ சூரியனை பார்க்கும் போதெல்லாம் என்னை நினைத்து கொள்வாயா என்று கேட்டான்.

விடை பெறும் வேளை வந்தது. அவன் குடும்பத்துடன் பேருந்து நிலையம் நோக்கி செல்வதை மாடியிலிருந்து பார்த்து கொண்டிருந்தேன். சாலை திருப்பத்தில் பார்வையிலிருந்து மறையும்  முன்பு ஒரு முறை திரும்பி பார்த்தான். என் மனதில் இனம் புரியாத ஒரு வலி.

மெள்ள இறங்கி வீட்டுக்குள் வந்தேன். தற்செயலாக கண்கள் நாள்காட்டி பக்கம் சென்றதும் அதிர்ந்தேன், கண்களில் கண்ணீருடன் உணர்ந்தேன் அன்றுதான் அவனுடைய பிறந்த நாள் என்று. கோடை விடுமுறையாதலால் நாட்கள் மற்றும் தேதியை பற்றிய நினைவே இல்லாமல் அவனை காயப்படுத்தி விட்டதை எண்ணி துடித்தேன்.

அதன் பிறகு அவனை திரும்ப பார்க்க முடியவில்லை. அவன் என்னை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் வந்த மிக முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அவன் பெற்றொர் வந்தனர், அவன் வரவில்லை. அவர்கள் வருவதும் மெல்ல குறைந்து, நின்றும் விட்டது. தொலைபேசி மற்றும் பிற வசதிகள் இல்லாத காலம் ஆதலால் மெதுவாக தொடர்பு அற்று போய்விட்டது.

ஆனால் ஒரு வருடம் கூட நான் தவறியதில்லை, அவனுக்கு  பிறந்த நாள் வாழ்த்து சொல்ல!

இதோ இன்றும் அவன் பிறந்த நாள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே, என்று சூரியனை பார்த்து சொல்லுகிறேன்.

கண்களில் கண்ணீர், சூரியன் சுட்டதால் அல்ல.