Saturday, August 27, 2011

நடு நிசியில் அப்பாவின் அலறல்

"அய்யோ..அய்யோ.. திருடன் ..திருடன்..ஓடறான் ஓடறான் ...போலீஸ் போலீஸ்....புடி புடி" என்று ஒரு அலறல் கேட்டு திடுக்கென எழுந்தேன் நான். ஆனால் பயப்படவில்லை. இரவு சுமார் ஒரு மணி இருக்கும், என் அப்பாதான் தூக்கத்தில் அலறி கொண்டிருந்தார். மெல்ல படுக்கை அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தேன். தொலை காட்சி பெட்டி இருக்கும் அறையில் இருந்த சோபாவில் அப்பா படுத்து கொண்டு கத்தி கொண்டிருந்தார். நான் அப்பா அருகில் சென்ற போது அம்மாவும் அங்கே வந்து விட்டாள். "உன் தூக்கமும் கெட்டதா?...போய் படு நாளைக்கு நீ வேலைக்கு போக வேண்டுமே" என்றாள். அங்கே சிறிது நேரம் நின்று விட்டு அப்பா அலறலை நிறுத்தியதும் மீண்டும் படுத்தேன்.

தூக்கத்தில் நடப்பவர் உண்டு, பேசுபவர் உண்டு. என் மகன் கூட தூக்கத்தில் முழு பாடத்தையும் ஒப்புவிப்பான் ஆனால் பரிட்சையில் எழுத மாட்டான் என்பது வேறு கதை. என் அப்பா வித்தியாசமானவர், தூக்கத்தில் உச்ச குரலில் அலறுவார். அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான அலறல் தான், "அய்யோ..அய்யோ.. திருடன் ..திருடன்..ஓடறான் ஓடறான் ...போலீஸ் போலீஸ்....புடி புடி" என்று. வீட்டிற்கு புதிதாய் வருபவர்கள் அரண்டு விடுவதுண்டு.

என் அப்பா சுபாவமாக மென்மையானவர், அதிர்ந்து பேச மாட்டார், அதட்ட மாட்டார். அதனால் அவர் இரவில் பெருங்குரலில் கத்துவது விசித்திரமாக இருக்கும். கேட்டால் "பயங்கரமான கெட்ட கனவு" என்பார். அதெப்படி ஒரே கனவு திரும்ப திரும்ப வரும், நல்ல கனவே வராதா என்று கேட்டால் குழந்தையை போன்று திரு திருவென முழிப்பார். 

பொதுவாக வயதானவர்கள் புராண கதைகளையும், பழைய படங்களையும் விரும்பி பார்ப்பார்கள், ஆனால் என் அப்பா நேர் விரோதம். பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு புது புது படங்களாய் தான் பார்ப்பார். தமிழ், இந்தி, ஆங்கிலம் இவற்றில் சண்டை, பேய், பிசாசு, மர்மம், துப்பறிவு இப்படித்தான் பெரும்பாலும் இருக்கும். இது மாதிரியான ஆங்கில நாவல்களையும் விரும்பி படிப்பார். கிருஷ்ணா ராமா என்று இருக்காமல் சினிமா சினிமா என்று இருக்கிறாரே என்று அம்மா அங்கலாய்ப்பாள். அவருக்கு கல்லூரிக்கு போகும் வயதில் நான்கு பேரன்கள். நால்வரில் ஒருவன் தினமும் ஏதாவது புத்தகமோ திரைப்பட தகடோ கொடுத்துவிடுவான், ஏதோ வேண்டுதலை நிறைவேற்றுவது போல இவரும் குதூகலமாய் ஒரே மூச்சில் முடிப்பார்.  "ஏன்டா அந்த மனுசனை கெடுக்குறீர்கள்" என்று பேரன்களை வைது கொண்டிருப்பாள் அம்மா. இப்படி சினிமாவும், நாவல்களும் படிப்பதால் தான் கெட்ட கனவு வருகின்றதோ என்று கேட்டால் அதற்கும் கனவுக்கும் சம்பந்தமே இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்.      

ஒரு முறை என் கணவர் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்தார். மருமகன் மீது ரொம்ப அன்பு கொண்டவர் அப்பா. அடமாக தான் போய் இரவில் துணைக்கு படுத்துகொள்வதாய் சென்று விட்டார். பாவம் அடுத்த அறையில் இருந்த நோயாளிக்கு மறு நாள் ஜன்னி வந்து விட்டதாம்.   

இன்னொரு வேடிக்கையும் உண்டு. அவர் கத்தும் போது யாராவது அருகில் சென்று எழுப்பினால், அவர்களையே திருடன் என்று பிசாசு பிடி பிடித்துவிடுவார். விடுவித்துக்கொள்ளவே முடியாது.

அந்நியன் படம் வெளிவந்த போது நிறைய பேர் என் அப்பாவிற்குள்ளும் ஒரு அந்நியன் இருப்பதாய் சொன்னார்கள். பின்பு ஏன் மருத்துவரிடம் காண்பிக்கவில்லை என்று கேட்பீர்கள்.  அதற்கும்  காரணம் உண்டு.   ஏன் என்றால் அப்பாவின் நடு நிசி அலறலால் பல நன்மைகளும் உண்டு.

ஒரு முறை அப்பா என் அத்தை அதாவது தன் அக்காவின் வீட்டிற்கு சென்று தங்கினார். அன்று இரவு இவர் போட்ட சத்தத்தில் அத்தை பெண் பயந்து, கண்கள் நிலை குத்தி போய் வார்த்தையும் வராமல் இருக்க, உடனே அவர்கள் நடு இரவில் பேயொட்டியை கூப்பிட்டு வந்து அவளுக்கு வேப்பிலை அடித்து பரிகாரமும் செய்தார்கள்.   பின்னர் ஒரு நாள் அத்தையிடம் கேட்டேன், "உனக்கு உன் தம்பி பற்றி தெரியாதா.. ஏன் உன் வீட்டாரிடம் கூறவில்லை?". "நன்றாயிருக்கிறதே, என் தம்பியை புகுந்த வீட்டில் விட்டு கொடுக்க முடியுமா?" என்று சொன்னாள் என் பாசமலர் அத்தை. அது மட்டுமல்லவாம், பெயில் ஆகி கொண்டிருந்த அத்தை பெண் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நன்றாக படிக்க ஆரம்பித்து விட்டாளாம். இப்போது என் அத்தை பெண் அரசு பணியில் இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் என் அப்பாவின் கனவுதானாம்.  இந்த நம்பிக்கையுடனேயே  என் அத்தையும் போய் சேர்ந்து விட்டாள்.   

மேலும் அவருடைய இந்த கத்தலால் எங்கள் வீட்டில் எப்போதும் திருட்டு பயம் இருந்ததில்லை.  என் பள்ளி பருவத்தில் நாங்கள் இருந்த வீட்டில் மாமரங்கள் இரண்டு இருந்தன. இரண்டுமே நன்றாய் காய்ப்பவை. அவை காய்த்திருக்கும் காலத்தில் அப்பா வீட்டிற்கு வெளியே திண்ணை போன்ற ஒரு இடத்தில் படுத்து கொள்ளுவார். மாங்காய் திருடர்கள் மற்ற இடங்களில் கை வரிசை காட்டுவர். ஆனால் எங்கள் வீட்டில் ஒரு மாங்காய் கூட திருட்டு போனதில்லை. இவர் இரவில் விட்டு விட்டு அலறுவதால் கீழே விழுந்து கிடக்கும் பழத்தை எடுக்க கூட ஒரு பயலுக்கும் துணிவு இருந்ததில்லை.

 
இப்பொதும் என் பெற்றொர் சென்னையில் வசிக்கும் எட்டு வீடுகள் கொண்ட குடியிருப்பிலும் திருட்டு பயம் கிடையாது என்றால் அதற்கு காரணம் அப்பாதான். ஏன் சொல்கிறேன் என்றால் பக்கத்து குடியிருப்புகளில் உள்ள வீட்டில் எல்லாம் இரவில் திருட்டு போயிருக்கிறது,  ஆனால் இவர்கள் குடியிருப்பில் பதினைந்து வருடமாக திருட்டென்பதே கிடையாது. இத்தனைக்கும் இரவில் வாட்ச்மேன் கூட அவர்கள் வைத்ததில்லை. கீழ் தளத்தில் தெருவிற்கு சமீபமாக உள்ள அறையில், சன்னல் அருகே இருக்கும் கட்டிலில் தான் என் அப்பா எப்பொதும் தூங்குவார். திருடன் வருவதற்கு முன்பே இவர் அவ்வபோது கத்திவிடுவதால் திருடர்கள் வருவதில்லை என்று அம்மா சில சமயம் பெருமை படுவாள்.

அது மட்டுமல்ல, அக்கம் பக்கத்திலும், சொந்தத்திலும் பத்திரமான இடம் என்று நினைப்பது என் அப்பா படுத்திருக்கும் அறையில் உள்ள பீரொவைதான்.  ஒரு அவசரத்திற்கு பணம், நகைகளை பத்திரமாக அதில் தான் வைத்து விட்டு போவார்கள். தங்கள் வீட்டில் கூட வைத்துகொள்ள மாட்டார்கள். ஏன், என் கணவருமே அப்படிதான் செய்வார்.

எங்கள் வீட்டு பேர பிள்ளைகள் எல்லாம் இவர் இரவில் அலறுவதை சிறு வயது முதலே கேட்டு கேட்டு வளர்ந்ததால், அவர்களுக்கு பேய், பிசாசு, காத்து, கருப்பு போன்ற பயமே கிடையாது. தைரியசாலிகளாக வளர்ந்து திரிகிறார்கள்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல, என் அப்பாவின் நடு நிசி அலறலும் எங்கள் குடும்பத்திற்கு நன்மையே செய்திருக்கிறது!!

 

Friday, August 26, 2011

அம்மாவும் அப்பமும்

என் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் அப்பம் என்றால் கொள்ளை ஆசை.

ஒவ்வொரு வருடமும் கிருக்ஷ்ண ஜெயந்தி என்றால் எனக்கு பதட்டம் தான். மற்ற பட்ச்சணங்கள் எல்லாம் கூட செய்து விடுவேன், ஆனால் இந்த அப்பம் மட்டும் செய்ய வருவதில்லை. எனக்கு திருமணம் ஆகி இருவது வருடங்கள் ஓடிவிட்டன. மகனும் மகளும் கல்லூரிக்கு  போகின்றனர். ஆனால் இன்றைக்கும் எனக்கு அப்பம் ஒழுங்காக செய்ய வருவதில்லை. ஒவ்வொரு வருடமும் என் அப்பம் மட்டும் என்னை காலை வாரி விட்டுவிடும்.

கிருக்ஷ்ண ஜெயந்திக்கு அரசு விடுமுறை என்பதால் என் கணவரும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பார்கள். நான் தனியார் துறையில் இருப்பதால், எனக்கு   பெரும்பாலும் விடுமுறை கிடைகாது. ஒரிரு மணி நேரம் அனுமதி கேட்டுகொண்டு வீட்டிற்கு வருவதே என் வழக்கம்.

"அம்மா இந்த தடவையாவது ஒழுங்காக அப்பம் செய்வியா?" என்று ஏக்கத்துடன் கேட்பான் என் பிள்ளை. "எதற்கும் உன் அம்மாவை ஒரு தடவை கேட்டுக்கொள்" இது என் கணவர். "எல்லாம் எனக்கும் தெரியும்", என்று நான். எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கும் தோரணையுடன் நிற்பாள் என் பெண். இப்படிதான் ஒவ்வொரு வருடமும் தொடங்கும் நான் அப்பம் செய்யும் கதை.

அப்பத்திற்கு மாவு கரைக்கும் போதே எனக்கு சந்தேகம் வந்துவிடும்.  மைதாவா, கோதுமை மாவா, உளுத்தமாவா அரிசி மாவா என்பது,  அளவும் புரிபடாது. என் பிள்ளை கடைக்கு ஓடுவான், வீட்டில் ஏதாவது பொருள் குறைந்தால்.

எண்ணை காயும் போதே பக்கத்தில் வந்து நின்று கொள்வார்கள், மகனும் மகளும். அடுப்படியை விட்டு நகர மாட்டார்கள். எல்லா கடவுள்களையும் வேண்டி கொண்டு எண்ணையில் நான் கரைத்த மாவை விடுவேன் நான்.

"போச் போச் , இந்த தடவையும் அப்பம் போச்" என்று கத்துவாள் என் மகள். "பாட்டிக்கு போன் போடுடி" என்பான் இவன். "வேண்டாம், நான் நேரில் சென்று அழைத்து வருகிறேன்" என்று வண்டியை எடுத்துகொண்டு ஒடுவார் என்னவர்.

இரண்டு தெருக்கள் தள்ளியிருந்தனர் என் பெற்றொர். மருமகன் கூப்பிட்டவுடன் போட்டது போட்டபடி ஓடி வருவாள் என் அம்மா. அடுப்பில் எண்ணை காய்ந்தபடி இருக்கும். முதலில் அடுப்பை அணைப்பாள். ஒரு சிணுங்கல் இருக்காது. ஏன் முதலில் கேட்கவில்லை என்ற சலிப்பு இருக்காது. நான் கரைத்த மாவில் என்ன குறை என்று கண்டுபிடிப்பாள். நானும் இதுதான் சமயம் தப்பித்தால் போதும் என்று நகர்ந்து விடுவேன். சாமர்த்தியமாக நான் கரைத்த மாவில் ஏதேனும் மாற்றம் செய்து நல்ல அப்பமும் செய்து விடுவாள் அம்மா. முன்பே தயாராக இருந்திருப்பாளோ என்று எனக்கு சந்தேகம் வரும்.

கூடவே தான் செய்து கொண்டு வந்திருந்த அப்பத்தையும் பிள்ளைக்களுக்கு தருவாள். "பாட்டி வீட்டு அப்பத்தின் சுவை தனி தான்" என்று அவர்கள் சொல்லுவதை கேட்கவே எரிச்சலாக இருக்கும் எனக்கு. "உன் அம்மாவும் இதேபோல் அடுத்தமுறை செய்துவிடுவாள் பாரேன்" என்று அவள் பேரனிடம் என்னை விட்டுகொடுக்காமல் சொல்லும்போதும் நான் அவளை கோபத்துடன் முறைப்பேன்.

இந்த வருடம் அம்மா சென்னையில் உள்ள என் அக்கா வீட்டிற்கு சென்று விட்டாள். என் குடும்பத்தில் ரொம்பவே பயந்து போயினர் நான் என்ன அமளி செய்வேனோ என்று. என்னவர் என்னை இந்த முறை விடுப்பு எடுக்க வைத்தார். தன் தமக்கையிடம் கேட்டு தேவையானவற்றை வாங்கி வைத்து விட்டார்.

நான் குளித்துவிட்டு அடுக்களை உள்ளே நுழையும்  போது சரியாக தொலைபேசி அழைத்தது. என் அக்காவின் குரல் பதட்டத்துடன் ஒலித்தது. அம்மாவிற்க்கு  திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக. உடனே எல்லோரும் சென்னைக்கு விரைந்தோம். என் கணவர் காரோட்ட நாங்கள் மருத்துவமனையை அடையும் போது மணி ஆறு இருக்கும்.

அம்மா தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்ததால், ஒருவர்க்கு மட்டுமே அனுமதி கொடுக்கபட்டது. நான் மட்டும் உள்ளே சென்றேன்.  அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துகொண்டேன். மெள்ள கண் விழித்து பார்த்தாள் அம்மா.."அப்பம் செய்தாயா..நன்றாக வந்ததா?" என்று பலகீனமான குரலில் கெட்டாள்.
"நீ இல்லாமல் எப்படி அம்மா அப்பம் நன்றாக வரும்?" என்றேன் நான் கண்ணீருடன், அம்மா மெல்ல சிரித்தாள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே!

இன்று அவன் பிறந்த நாள்.

சரியாக இன்றோடு இருவத்தயிந்து வருடங்கள் ஆகின்றன அவனை பார்த்து. ஆனால் இன்று நடந்தது போலவே மனதில் பசுமையாக உள்ளது. அது கோடை விடுமுறையின் ஒரு மாலை பொழுது. என் வீட்டின் மொட்டைமாடியில் அவன் பெற்றோர்களும்  என் வீட்டாறும்  ஒரு புறம் பேசி கொண்டிருக்க, நாங்கள் இருவரும் மறுபுறம் பேசி கொண்டிருந்தோம் என்று சொல்லுவதை விட  மௌனமாக பார்த்து கொண்டிருந்தோம் என்பதே சரியாக இருக்கும்.

நான் கல்லூரியில்  முதல் வருடம் படித்துகொண்டிருந்தேன். அவன் அதே படிப்பில் வேறொரு ஊரில் மூன்றாம் வருடம். அவனை சந்தித்து சில வருடங்கள் ஆகி இருந்தன. பள்ளிக்கூட நாட்களில் பார்த்தது. அவர்கள் குடும்பமும் எங்கள்  குடும்பமும் நெடுங்காலமாக நண்பர்கள். வேலை நிமித்தம் மாற்றலாகி அவர்கள் எங்கள் சிறிய ஊரிலிருந்து சென்னைக்கு போய் விட்டனர். அன்று அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தனர்.
 
மாடி சிறிய மதில் சுவரின் மேல் ஒரு காலை அந்தபுறமும் மறு காலை இந்த புறமுமாக போட்டு அமர்ந்திருந்தான். நானும் தளர்வாக சுவற்றில் சாய்ந்தவாறு நின்றிருந்தேன். அழகான வாலிபனாக வளர்ந்திருந்தான் அவன்.

ஏதேதோ கேள்விகள் கேட்டான், நான் ஒரிரு வார்த்தைகளில் பதில் அளித்துகொண்டிருந்தேன். ஏன் ஒற்றை பின்னலுக்கு மாறி விட்டாய், இன்னும் சிறிது நாள் தாவணி அணியலாமே, ஏன் அதற்குள் புடவை, நீயும் ஏன் என் படிப்பை தேர்ந்தெடுத்தாய்,  போன்ற கேள்விகள்.

அவன் கண்களில் கனிவும் காதலும் மின்னியதை என்னால் நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை.  சிறிது நேரம்  பேச முடியாமல் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பேச பிடிக்கவில்லையா என்று கேட்டான். அதற்கும் பதில் இல்லை.

ஏன் என் கடிதங்களுக்கு பதில் இல்லை என்று திடீரென கேட்டான். இந்த கேள்வியை எதிர்பார்த்தே நான் பயந்து கொண்டிருந்தேன். என்னுடைய விடுதி முகவரிக்கு அவன் அனுப்பிய கடிதங்கள் அவை. அவன் உள்ளத்தை வெளிபடுத்தி என் சம்மதத்தை கேட்டிருந்தான். படிக்க இன்பமாக இருந்தாலும் பதில் எழுத துணிவில்லை. மிகவும் கண்டிபான, காதல் செய்வது தவறு என்று போதித்து வளர்க்கபட்டு இருந்தேன். இதற்கும் மௌனம் காத்தேன்.

சரி விடு, என் பிறந்த நாள் நினைவிருக்கிறதா என்று கேட்டான். தலைஅசைத்து தேதியை சொன்னேன். சரியாகத்தான் சொன்னேன் இருந்தாலும் அவன் முகத்தில் ஏமாற்றம் கலந்த வருத்தம்,ஆயாசம்.  ஏனென்று எனக்கு புரியவில்லை.

என் பெயருக்கு ஒரு பொருள் உண்டு தெரியுமா என்று கேட்டான். எனக்கு தெரியவில்லை. சூரியனை குறிக்கும் வடமொழிசொல் தான் என் பெயர் என்றான். நீ சூரியனை பார்க்கும் போதெல்லாம் என்னை நினைத்து கொள்வாயா என்று கேட்டான்.

விடை பெறும் வேளை வந்தது. அவன் குடும்பத்துடன் பேருந்து நிலையம் நோக்கி செல்வதை மாடியிலிருந்து பார்த்து கொண்டிருந்தேன். சாலை திருப்பத்தில் பார்வையிலிருந்து மறையும்  முன்பு ஒரு முறை திரும்பி பார்த்தான். என் மனதில் இனம் புரியாத ஒரு வலி.

மெள்ள இறங்கி வீட்டுக்குள் வந்தேன். தற்செயலாக கண்கள் நாள்காட்டி பக்கம் சென்றதும் அதிர்ந்தேன், கண்களில் கண்ணீருடன் உணர்ந்தேன் அன்றுதான் அவனுடைய பிறந்த நாள் என்று. கோடை விடுமுறையாதலால் நாட்கள் மற்றும் தேதியை பற்றிய நினைவே இல்லாமல் அவனை காயப்படுத்தி விட்டதை எண்ணி துடித்தேன்.

அதன் பிறகு அவனை திரும்ப பார்க்க முடியவில்லை. அவன் என்னை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் வந்த மிக முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அவன் பெற்றொர் வந்தனர், அவன் வரவில்லை. அவர்கள் வருவதும் மெல்ல குறைந்து, நின்றும் விட்டது. தொலைபேசி மற்றும் பிற வசதிகள் இல்லாத காலம் ஆதலால் மெதுவாக தொடர்பு அற்று போய்விட்டது.

ஆனால் ஒரு வருடம் கூட நான் தவறியதில்லை, அவனுக்கு  பிறந்த நாள் வாழ்த்து சொல்ல!

இதோ இன்றும் அவன் பிறந்த நாள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே, என்று சூரியனை பார்த்து சொல்லுகிறேன்.

கண்களில் கண்ணீர், சூரியன் சுட்டதால் அல்ல.