Saturday, August 27, 2011

நடு நிசியில் அப்பாவின் அலறல்

"அய்யோ..அய்யோ.. திருடன் ..திருடன்..ஓடறான் ஓடறான் ...போலீஸ் போலீஸ்....புடி புடி" என்று ஒரு அலறல் கேட்டு திடுக்கென எழுந்தேன் நான். ஆனால் பயப்படவில்லை. இரவு சுமார் ஒரு மணி இருக்கும், என் அப்பாதான் தூக்கத்தில் அலறி கொண்டிருந்தார். மெல்ல படுக்கை அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தேன். தொலை காட்சி பெட்டி இருக்கும் அறையில் இருந்த சோபாவில் அப்பா படுத்து கொண்டு கத்தி கொண்டிருந்தார். நான் அப்பா அருகில் சென்ற போது அம்மாவும் அங்கே வந்து விட்டாள். "உன் தூக்கமும் கெட்டதா?...போய் படு நாளைக்கு நீ வேலைக்கு போக வேண்டுமே" என்றாள். அங்கே சிறிது நேரம் நின்று விட்டு அப்பா அலறலை நிறுத்தியதும் மீண்டும் படுத்தேன்.

தூக்கத்தில் நடப்பவர் உண்டு, பேசுபவர் உண்டு. என் மகன் கூட தூக்கத்தில் முழு பாடத்தையும் ஒப்புவிப்பான் ஆனால் பரிட்சையில் எழுத மாட்டான் என்பது வேறு கதை. என் அப்பா வித்தியாசமானவர், தூக்கத்தில் உச்ச குரலில் அலறுவார். அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான அலறல் தான், "அய்யோ..அய்யோ.. திருடன் ..திருடன்..ஓடறான் ஓடறான் ...போலீஸ் போலீஸ்....புடி புடி" என்று. வீட்டிற்கு புதிதாய் வருபவர்கள் அரண்டு விடுவதுண்டு.

என் அப்பா சுபாவமாக மென்மையானவர், அதிர்ந்து பேச மாட்டார், அதட்ட மாட்டார். அதனால் அவர் இரவில் பெருங்குரலில் கத்துவது விசித்திரமாக இருக்கும். கேட்டால் "பயங்கரமான கெட்ட கனவு" என்பார். அதெப்படி ஒரே கனவு திரும்ப திரும்ப வரும், நல்ல கனவே வராதா என்று கேட்டால் குழந்தையை போன்று திரு திருவென முழிப்பார். 

பொதுவாக வயதானவர்கள் புராண கதைகளையும், பழைய படங்களையும் விரும்பி பார்ப்பார்கள், ஆனால் என் அப்பா நேர் விரோதம். பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு புது புது படங்களாய் தான் பார்ப்பார். தமிழ், இந்தி, ஆங்கிலம் இவற்றில் சண்டை, பேய், பிசாசு, மர்மம், துப்பறிவு இப்படித்தான் பெரும்பாலும் இருக்கும். இது மாதிரியான ஆங்கில நாவல்களையும் விரும்பி படிப்பார். கிருஷ்ணா ராமா என்று இருக்காமல் சினிமா சினிமா என்று இருக்கிறாரே என்று அம்மா அங்கலாய்ப்பாள். அவருக்கு கல்லூரிக்கு போகும் வயதில் நான்கு பேரன்கள். நால்வரில் ஒருவன் தினமும் ஏதாவது புத்தகமோ திரைப்பட தகடோ கொடுத்துவிடுவான், ஏதோ வேண்டுதலை நிறைவேற்றுவது போல இவரும் குதூகலமாய் ஒரே மூச்சில் முடிப்பார்.  "ஏன்டா அந்த மனுசனை கெடுக்குறீர்கள்" என்று பேரன்களை வைது கொண்டிருப்பாள் அம்மா. இப்படி சினிமாவும், நாவல்களும் படிப்பதால் தான் கெட்ட கனவு வருகின்றதோ என்று கேட்டால் அதற்கும் கனவுக்கும் சம்பந்தமே இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்.      

ஒரு முறை என் கணவர் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்தார். மருமகன் மீது ரொம்ப அன்பு கொண்டவர் அப்பா. அடமாக தான் போய் இரவில் துணைக்கு படுத்துகொள்வதாய் சென்று விட்டார். பாவம் அடுத்த அறையில் இருந்த நோயாளிக்கு மறு நாள் ஜன்னி வந்து விட்டதாம்.   

இன்னொரு வேடிக்கையும் உண்டு. அவர் கத்தும் போது யாராவது அருகில் சென்று எழுப்பினால், அவர்களையே திருடன் என்று பிசாசு பிடி பிடித்துவிடுவார். விடுவித்துக்கொள்ளவே முடியாது.

அந்நியன் படம் வெளிவந்த போது நிறைய பேர் என் அப்பாவிற்குள்ளும் ஒரு அந்நியன் இருப்பதாய் சொன்னார்கள். பின்பு ஏன் மருத்துவரிடம் காண்பிக்கவில்லை என்று கேட்பீர்கள்.  அதற்கும்  காரணம் உண்டு.   ஏன் என்றால் அப்பாவின் நடு நிசி அலறலால் பல நன்மைகளும் உண்டு.

ஒரு முறை அப்பா என் அத்தை அதாவது தன் அக்காவின் வீட்டிற்கு சென்று தங்கினார். அன்று இரவு இவர் போட்ட சத்தத்தில் அத்தை பெண் பயந்து, கண்கள் நிலை குத்தி போய் வார்த்தையும் வராமல் இருக்க, உடனே அவர்கள் நடு இரவில் பேயொட்டியை கூப்பிட்டு வந்து அவளுக்கு வேப்பிலை அடித்து பரிகாரமும் செய்தார்கள்.   பின்னர் ஒரு நாள் அத்தையிடம் கேட்டேன், "உனக்கு உன் தம்பி பற்றி தெரியாதா.. ஏன் உன் வீட்டாரிடம் கூறவில்லை?". "நன்றாயிருக்கிறதே, என் தம்பியை புகுந்த வீட்டில் விட்டு கொடுக்க முடியுமா?" என்று சொன்னாள் என் பாசமலர் அத்தை. அது மட்டுமல்லவாம், பெயில் ஆகி கொண்டிருந்த அத்தை பெண் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நன்றாக படிக்க ஆரம்பித்து விட்டாளாம். இப்போது என் அத்தை பெண் அரசு பணியில் இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் என் அப்பாவின் கனவுதானாம்.  இந்த நம்பிக்கையுடனேயே  என் அத்தையும் போய் சேர்ந்து விட்டாள்.   

மேலும் அவருடைய இந்த கத்தலால் எங்கள் வீட்டில் எப்போதும் திருட்டு பயம் இருந்ததில்லை.  என் பள்ளி பருவத்தில் நாங்கள் இருந்த வீட்டில் மாமரங்கள் இரண்டு இருந்தன. இரண்டுமே நன்றாய் காய்ப்பவை. அவை காய்த்திருக்கும் காலத்தில் அப்பா வீட்டிற்கு வெளியே திண்ணை போன்ற ஒரு இடத்தில் படுத்து கொள்ளுவார். மாங்காய் திருடர்கள் மற்ற இடங்களில் கை வரிசை காட்டுவர். ஆனால் எங்கள் வீட்டில் ஒரு மாங்காய் கூட திருட்டு போனதில்லை. இவர் இரவில் விட்டு விட்டு அலறுவதால் கீழே விழுந்து கிடக்கும் பழத்தை எடுக்க கூட ஒரு பயலுக்கும் துணிவு இருந்ததில்லை.

 
இப்பொதும் என் பெற்றொர் சென்னையில் வசிக்கும் எட்டு வீடுகள் கொண்ட குடியிருப்பிலும் திருட்டு பயம் கிடையாது என்றால் அதற்கு காரணம் அப்பாதான். ஏன் சொல்கிறேன் என்றால் பக்கத்து குடியிருப்புகளில் உள்ள வீட்டில் எல்லாம் இரவில் திருட்டு போயிருக்கிறது,  ஆனால் இவர்கள் குடியிருப்பில் பதினைந்து வருடமாக திருட்டென்பதே கிடையாது. இத்தனைக்கும் இரவில் வாட்ச்மேன் கூட அவர்கள் வைத்ததில்லை. கீழ் தளத்தில் தெருவிற்கு சமீபமாக உள்ள அறையில், சன்னல் அருகே இருக்கும் கட்டிலில் தான் என் அப்பா எப்பொதும் தூங்குவார். திருடன் வருவதற்கு முன்பே இவர் அவ்வபோது கத்திவிடுவதால் திருடர்கள் வருவதில்லை என்று அம்மா சில சமயம் பெருமை படுவாள்.

அது மட்டுமல்ல, அக்கம் பக்கத்திலும், சொந்தத்திலும் பத்திரமான இடம் என்று நினைப்பது என் அப்பா படுத்திருக்கும் அறையில் உள்ள பீரொவைதான்.  ஒரு அவசரத்திற்கு பணம், நகைகளை பத்திரமாக அதில் தான் வைத்து விட்டு போவார்கள். தங்கள் வீட்டில் கூட வைத்துகொள்ள மாட்டார்கள். ஏன், என் கணவருமே அப்படிதான் செய்வார்.

எங்கள் வீட்டு பேர பிள்ளைகள் எல்லாம் இவர் இரவில் அலறுவதை சிறு வயது முதலே கேட்டு கேட்டு வளர்ந்ததால், அவர்களுக்கு பேய், பிசாசு, காத்து, கருப்பு போன்ற பயமே கிடையாது. தைரியசாலிகளாக வளர்ந்து திரிகிறார்கள்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல, என் அப்பாவின் நடு நிசி அலறலும் எங்கள் குடும்பத்திற்கு நன்மையே செய்திருக்கிறது!!

 

No comments:

Post a Comment